(செய்திப்பிரிவு)

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும் என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார் என்று தெரிவித்துள்ள அவர், இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான 'த இன்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்நேர்காணலில் உள்ளடங்கியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

தற்போது இலங்கை இரண்டு பிரதான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. வெளிநாட்டு நாணயமாற்று நெருக்கடி மற்றும் நிதி ரீதியான சவால் என்பனவே அவையாகும். கொரோனா வைரஸ் பரவல் இந்த நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை ஓரளவிற்கு ஸ்திரப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்ற போதிலும், நாம் இந்நெருக்கடிக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளை அடையாளங்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும்.

இவ்விடயத்தைக் கையாள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி என்று நோக்கும்போது, கடந்த டிசம்பர் மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது 'நான்று அம்ச ஒத்துழைப்பு செயற்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. 

அதன்பிரகாரம் அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் நிகழ்நிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை வழங்கும் அறிவிப்பு இந்தியாவினால் வெளியிடப்பட்டது. 

அதேபோன்று எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் அதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதாகவும் கடந்த புதன்கிழமை இந்தியாவினால் அறிவிக்கப்பட்டது. மேலும் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடனுதவி மூலம் நாட்டின் கையிருப்பை அதிகரிப்பதிலும் சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டில் முதலீடுகளை உயர்த்துவதிலும் இந்தியா பங்களிப்புச்செய்திருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து இந்தியாவுடனான நல்லுறவு தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவந்திருக்கின்றார். இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன் இருநாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையிலான தொடர்பு மேலும் வலுவடையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம் என்று கருதுகின்றேன். 

இருப்பினும் அவர் பதவியேற்றுக்கொண்டவுடன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்துவிட்டது. அதனைத்தொடர்ந்து இந்தியா இலங்கைக்குத் தடுப்பூசிகளை வழங்கியது. இந்தியாவினால் குறித்தவொரு கட்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யமுடியாமல்போகும் வரையில், எமக்கு ஆதரவளிக்கின்ற முதலாவது நாடாக இந்தியாவே இருந்துவருகின்றது.  

கேள்வி - இலங்கையைக் கடன்பொறிக்குள் சிக்கவைக்கும் வகையிலான சீனாவின் ஆதிக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய உரவிவகாரம் என்பன தொடர்பில் குற்றஞ்சாட்டி ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் அண்மையில் சீன ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இலங்கைக்குள் சீனாவிற்கு எதிரான நிலைப்பாடு தீவிரமடைந்துவருவதுபோல் தெரிகின்றதே?

பதில் - நான் அதனை அவ்வாறு நோக்கவில்லை. எமது (இலங்கையின்) சொத்துக்களில் சீனாவின் கடன்கள் வெறுமனே 10 சதவீதமானவையாகும். ஆகவே அது முக்கியமான, ஆனால் கட்டாயமற்றதோர் காரணியாகும். எமது சொத்துக்களில் பிரதானமானவை நாம் விநியோகித்த வெளிநாட்டு பிணைமுறிகள் ஊடாகத் திரட்டப்பட்ட வருமானங்களாகும். எனவே ஒரு திசையை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இது நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பின்பற்றப்பட்டுவரும் கொள்கையாகும். ஆகவே பிறநாடுகள்மீது குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, சுதந்திரமடைந்ததிலிருந்து நாம் என்ன செய்தோம் என்பதை சுயபரிசீலனை செய்து பார்ப்பது அவசியமாகும். 

கேள்வி - அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். இது இருநாடுகளுக்கும் இடையில் முக்கியமானதோர் விடயமாக மாறிவருவதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் - அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளுக்காக விசேட நிபுணர் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அக்குழுவின் ஊடாகத் தயாரிக்கப்படும் வரைபு அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என்று கருதுகின்றேன். பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவன் என்றவகையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும்போது அங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. 

எனவே அனைத்து அரசியல்கட்சிகளும் இதனை முன்னிறுத்தி செயற்படவேண்டியது அவசியமாகும். இதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கமுடியும். முதலாவது அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாகும். இரண்டாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களை எவ்வாறு அபிவிருத்திசெய்வது என்ற புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்வதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.