(என்.வீ.ஏ.)

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்றிடியும் அதிசிறந்ந சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தானாவும் தெரிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் 36 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஷஹீன் ஷா அப்ரிடி மொத்தமாக 78 விக்கெட்களை வீழ்த்தி, வருடத்தின் அதிசிறந்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றெடுத்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் மிகத் திறமையாக பந்துவீசிய ஷஹீன் ஷா அப்றிடி, பல்வேறு நாடுகளின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்ற சர்வதேச இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இறுதிப் போட்டிவரை முன்னேற பெரும் பங்காற்றியிருந்தார்.

அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை

இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தானா

வருடத்தின் அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாகத் தெரிவான இந்தியாவின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானா, ரஷேல் ஹேஹோ ப்ளின்ட் விருதை வென்றெடுத்தார்.

கடந்த வருடம் 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மந்தானா மொத்தமாக 855 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவரது சராசரி 38.86 ஆகும்.

2021இல் இந்திய கிரிக்கெட் சிரமங்களை எதி;ர்கொண்டபோதிலும் ஸ்ம்ரித்தி மந்தான தனது துடுப்பாட்ட ஆற்றல்களால் உயர்ந்து நின்றார்.