(நா.தனுஜா)

இதுவரையான காலமும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவலானது தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் எமது நாட்டில் ஒமிக்ரோன் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அதனூடாக கொரோனா வைரஸ் பரவலின் ஐந்தாவது அலையை உருவாவதை எவ்வாறு தடுப்பது? என்பது குறித்து 12 மருத்து வநிபுணர்கள் அடங்கிய குழுவினால் ஆராயப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பான அவர்களது இறுதி அறிக்கை வெகுவிரையில் ஜனாதிபதியிடமும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமும் கையளிக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தன்மையையும் தொற்றுப்பரவல் வேகத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் விரைவாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். 

அடுத்தாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். 

அதிலும் குறிப்பாக வெளிநாடுகளைப்போன்று வீடுகளில் இருந்தவாறு பரிசோதனை செய்துகொள்வதற்கு ஏற்றவாறான வசதிகளை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் எமது அறிக்கையில் முன்வைத்திருக்கின்றோம். 

அதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை வீடுகளிலேயே வைத்துப் பராமரிப்பதற்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்தோடு கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் இதேபோன்ற செயற்திறனுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாகவும் வாசன் ரட்ணசிங்கம் கூறினார்.