(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி குருநாகல் வெலகெதர மைதானத்தில் 8 மாகாண அணிகளின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ள கோலாகல தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர திணத்தை முன்னிட்டு இந்த சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

குருநாகலில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் கிழக்கு மாகாணமும் மத்திய மாகாணமும் மோதவுள்ளன.

தொடரும் போட்டியில் ரஜரட்ட - ஊவா அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

புதன்கிழமையன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் வடக்கு மாகாணமும் சப்ரகமுவ மாகாணமும் விளையாடவுள்ளதுடன் தொடரும் போட்டியில் மேற்கு மாகாணத்தை தெற்கு மாகாணம் சந்திக்கவுள்ளது.

சிரேஷ்ட தேசிய, 23 வயதுக்குட்பட்ட தேசிய மற்றும் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிகளில் இடம்பெற்ற வீரர்கள் உட்பட இன்னும் பல வீரர்கள் மாகாண அணிகளில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

அந்தந்த மாகாணங்களில் பிறந்த வீரர்களே குறிப்பிட்ட மாகாண அணிகளுக்கு விளையாட முடியும் என சம்மேளனம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் திறமையான வீரர்கள் இல்லாததன் காரணமாக அந்த அணிகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கின்றபோதிலும் வட மத்திய மற்றும் வட மேல் ஆகிய இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டு ரஜரட்ட என்ற பெயரில் இணை மாகாண அணியாக பங்குபற்றுகின்றதன.  .

இதற்கு அமைய வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, ரஜரட்ட, ஊவா, சப்ரகமுவ ஆகிய எட்டு அணிகள் மாகாணங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.

எதிர்கால வீரர்களை இனங்காணும் நோக்கிலும் பிற மாவட்டங்களில் கால்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 25ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 19ஆம் திகதிவரை லீக் சுற்று 8 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

1ஆம் கட்டப் போட்டிகள் குருநாகலிலும், 2ஆம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்திலும், 3ஆம் கட்டப் போட்டிகள் திருகோணமலையிலும் 4ஆம் கட்டப் போட்டிகள் பதுளையிலும், 5ஆம் கட்டப் போட்டிகள் கண்டி மற்றும் நாவலப்பிட்டியிலும் 6ஆம் கட்டப் போட்டிகள் காலி மற்றும் மாத்தறையிலும் 8ஆம் கட்டப் போட்டிகள் கேகாலையிலும் நடைபெறும்.

அரை இறுதிப் போட்டிகள் இரண்டு சுற்றுகளாக (சொந்த மண், அந்நிய மண்) பெப்ரவரி 22ஆம் 25ஆம் திகதிகளில் நடத்தப்படும்.

பங்குபற்றும் 8 அணிகளில் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு, தெற்கு மாகாணங்களில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தேசிய வீரர்கள் நிரம்பி வழிவதால் இந்த நான்கு அணிகளும் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அணிக்கு ரட்ணம் ஜஸ்மின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலும் தேசிய வீரர்களான ஜூட் சுபனும் நிதர்ஷனும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்துக்கு முன்னாள் தேசிய வீரர் எம்.எச். றூமி பயிற்றுநராகவும் தேசிய வீரர் எம். முஷ்தாக் அணித் தலைவராகவும் எம். ரிப்கான் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண அணிக்கு மற்றொரு முன்னாள் தேசிய வீரர் பக்கீர் அலி பயிற்றுநராகவும் தேசிய குழாத்தில் இடம்பெறும் காலித் அஸ்மில் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்துக்கு இலங்கையின் மூத்த முன்னாள் வீரர் சுமித் வல்பொல பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் பதவிக்கு இன்னும் ஒருவரும் தீர்மானிக்கப்படவில்லை.

அணி முகாமைத்துவக் கூட்டம் திங்கட்கிழமை (24) மாலை நடைபெறும்போது அணித் தலைவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் தேசிய பதில் கோல்காப்பாளர் கவீஷ் லக்ப்ரியவுக்கு அணித் தலைமைப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

இராஜமணி தேவசகாயம் ரஜரட்ட (வட மத்திய-வடமேல் மகாணம்) இணை மாகாணத்துக்கும் மொஹமத் ஹம்சா ஊவா மாகாணத்துக்கும் ஷிரன்த குமார தெற்கு மாகாணத்துக்கும், எம். எவ். ரஹ்மான் சப்ரகமுவ மாகாணத்துக்கும் பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணிகளுக்கான தலைவர்கள் திங்கட்கிழமை மாலை நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்படுவதுடன் பங்குபற்றும் வீரர்கள் மற்றும் பயிற்றுநர் குழாத்தினருக்கு தங்கப் பதக்கங்களுடன் தலா 50,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணி வீரர்களுக்கும் பயிற்றநர் குழாத்தினருக்கும் வெள்ளிப் பதக்கங்களுடன் தலா 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

அத்துடன் அதிசிறந்க வீரர், அதி சிறந்த கோல்காப்பாளர், முன்னேறிவரும் வீரர் (19 வயதின்கீழ்) ஆகியோருக்கு விருதுகளுடன் தலா 50,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.