(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என  மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அத்துடன் மின்விநியோகத்தை திட்டமிட்டு துண்டிக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத் துண்டிப்பு குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரை விநியோகிக்குமாறு ஜனாதிபதி மத்திய வங்கிக்கு ஆலோசனை இந்த சந்திப்பின்போது ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய 35000 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் மற்றும் 37,500 மெற்றிக்தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கு டொலர் செலுத்த மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தடையில்லாமல் விநியோகிக்க வலுசக்தி அமைச்சும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள், மின்நிலையங்கள் செயலிழத்தல் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.

சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகத்தை நான்கு கட்டங்களாக துண்டிக்க நேரிடும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் இன்று குறிப்பிட்டனர்.

மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பை அமுல்படுத்த ஆரம்பத்தில் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.