‘ஞான விளக்குகள்’ என விளிக்கப்பட்டு மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்திற்கும் முதற்படியாக கருதப்படுகின்ற ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். போற்றப்படும் ஆசிரியத்துவம் என்பது மிகவும் புனிதமானது. ஆசு (மாசு) நீக்கி, அறியாமை இருள் அகற்றி, அறிவென்னும் ஒளிபரப்பும் ஞான விளக்குகளே ஆசிரியர்கள் என சுவாமி விவேகானந்தர் ஆழமாக, அழகாகக் கூறியுள்ளார். பல்வேறு கல்விச் சிந்தனையாளர்களான ஜோன்டூஜி, பிளட்டோ, காந்தியடிகள், விவேகானந்தர் போன்ற பலரினதும் கருத்துக்களின் படி கல்வி என்பது ஒரு பிள்ளையின் (ஒருவரின்) அறிவு, திறன், மனப்பாங்கு, தேர்ச்சிகள் என்பவற்றை விருத்தியடையச் செய்து சமூகம் காண விழைகின்ற சான்றோனை (நற்பிரஜையை) உருவாக்குவது என்பதே அடிப்படையான கருத்தாகும். புனிதமாக போற்றப்படுகின்ற ஆசிரிய சேவையை புரிகின்ற ஆசிரியர்கள் தமது சேவையில் வெற்றி பெறுவதற்கு பல உன்னதமான காரியங்களில் சிறந்து விளங்க வேண்டியது இன்றியமையாதவையாக உள்ளன.
மாணவச் செல்வங்களில் பற்றும் பாசமும் வைத்து அர்ப்பணிப்புடன் தொழிற்படும்போது இதனால் கிடைக்கின்ற மன நிறைவு மகத்தானதாகவே இருக்கும். ஆசிரியர்கள் சேவைகளுக்கெனவே பிறந்தவர்கள் என்றும் ஆசிரியர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்னும் கருத்துக்களும் வாதப் பிரதிவாதங்களும் உள்ள போதும் ஆசிரியர்களின் மகத்தான சேவையானது வெற்றியுடன் வளர வேண்டுமெனில் ஆசிரியர்கள் பின்வருவனவற்றில் மிகுந்த கவனம் செலுத்துதல் அவசியமாகும் அவையாவன:
தங்களது வாண்மையை விருத்தி செய்து கொள்ளுதல், முன் மாதிரியானவர்களாக திகழ்தல்.
வகுப்பறையில் பிள்ளையை அறிதல் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.
வாண்மை விருத்தியைப் பற்றி நோக்கும்போது கல்வியானது வரையறையற்றது, கருவில் இருந்து கல்லறைவரை கல்வி தொடர்ச்சியுடையது என்பார்கள். இதன்படி ஆசிரியர்கள் என்போர் என்றும் கற்றுக் கொண்டிருப்பவராக, நவீன உலகின் மாற்றங்கள், சவால்கள், போட்டிகள், வியத்தகு வளர்ச்சிகள் என்பவற்றிற்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக புதியனவற்றை தேடி அறியும் ஆவல் உள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். தமது பாடங்கள் தொடர்பான போதிய அறிவும் அவை தொடர்பான செயலமர்வுகளில் கலந்து கொள்ளுதல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றுடன் சிறந்த மொழி அறிவுகள், தொடர்பாடல் திறன்கள் என்பவற்றையும் வளர்ப்பதுடன் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கை மூலம் தம்மை வளர்ப்பவர்களாக திகழ வேண்டும்.
முன்மாதிரியானவர்களாக நடந்து கொள்ளுதல் என்பதை ஆசிரியர்களிடத்தே நோக்கும்போது தாம் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு பாடசாலை ஆயத்த மணி அடிப்பதற்கு முன்பாக பாடசாலை சென்றடைதல் என்பது கூட முன்மாதிரியான நடத்தையின் ஆரம்பமாகும். இது மட்டுமல்ல. ஆசிரியர்களின் முன்மாதிரியான நடத்தை செயற்பாடுகள் பலவுள்ளன. தமது பேச்சு, சொல் செயற்பாடுகள், நடத்தைகள், அணிந்துகொள்ளும் ஆடைகள், சிகை அலங்காரம், ஆடைகளை அணிந்து கொள்ளும் முறைகள், நட்புறவை பேணுதல், அறநெறி ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடித்தல், அர்ப்பணிப்பு மனப்பாங்கு வளர்த்தல், கடமைகளைப் பொறுப்பேற்றல், பெற்றுக் கொண்ட, வழங்கப்பட்ட பொறுப்புக்கள், கடமைகளை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்து முடித்தல், விடுமுறைகள் எடுப்பதை இயன்றவரை குறைத்துக் கொள்ளுதல் வகுப்பறைக்கு நேரத்துடன் சமுகமளித்தல், சமூகத்துடனும் சமூக நிறுவனங்களுடனும் நட்புறவுடன் பழகுதல், சிறந்த கூட்டுறவை வளர்த்து நம்பிக்கையுள்ளவர்களாக திகழ்தல், மூத்தோரை மதித்தல்.
தமது நடவடிக்கைகளில் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருத்தல், பாடசாலை நிர்வாகத்துடனும் சக ஆசிரியர்களுடனும் சிறப்பான நட்புறவைப் பேணுதல், தமது கடமையை பாடசாலை முதல்வரை திருப்திப்படுத்துவதற்காக செய்வதாக கருதாது தமது மனசாட்சிக்கு விரோதம் இல்லாத வகையில் பாடசாலை முதல்வரின் ஆசனம் வெற்றிடமாக இருந்தாலும்கூட ஆசிரியர்கள் தமக்குரிய கடமைகளை எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி அர்ப்பணிப்புடன் சேவை புரிபவர்களாக தம்மை வளர்த்தெடுக்க வேண்டும். இப்படியான சேவை புரியும் ஆசிரியர்களுக்கு இறைவனின் ஆசி என்றுமே இருக்கும் என்பது உண்மையாகும்.
அடுத்து, வகுப்பறையில் பிள்ளையை அறிதல் என்பதைக் கருதும் போது வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக அரசினால் தயாரிக்கப்படுகின்ற பாடத் திட்டங்கள், அறிவுரைப்பு வழிகாட்டிகள், வருடா வருடம் மாற்றமடைவது இல்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட வகுப்பறையில் பிள்ளைகள் (மாணவர்கள்) மாறிக் கொண்டே இருப்பார்கள் என்பதும் ஒரு வகுப்பின் வெவ்வேறு பிரிவுகளில் கூட மாணவர்கள் வேறுபட்ட திறமைகளுடன் இருப்பார்கள் என்பதும் குறிப்பிட்ட ஒரு பிரிவில் கூட கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையிலுமே பல வேறுபாடுகள், மாற்றங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே, ஒரு ஆசிரியர் தான் தன் துறைசார்ந்த பாடப் பரப்பில் போதியளவு புலமை, திறமை இருந்தால் மட்டும் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டை வினைத்திறனுடையதாக மாற்ற முடியாது. பாடப் புலமைசார் திறனுடன் “பிள்ளையை அறிதல்” என்பது இன்றியமையாதது. பிள்ளையை அறிந்து பிள்ளையின் மனப்பாங்கில் கற்றலில் நாட்டமும் ஆர்வம் வர செய்வதன் மூலம் ஓர் ஆசிரியர் வெற்றியடைகின்றார் என்றால் மிகையல்ல. வகுப்பிலுள்ள வெவ்வேறு பிள்ளையும் தனியாள் வேறுபாடு உடையவர்கள் மட்டுமல்ல அவர்களின குடும்ப, பொருளாதார, சமய, கல்விப் பின்னணிகளும் வேறுபட்டவையாக இருக் முடியும் பிள்ளையை அறிதல் என்பதில் தனியாக பிள்ளையின் பெயரை மட்டும் அறிதல் என்பது அர்த்தமல்ல, இங்கே பல்வேறு அறிக்கைகள் அடங்கியுள்ளன. எவ்வாறாயினும் வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவர்களையும் ஆசிரியர் அவர்களின் பெயரைக் கூறி அழைப்பவராக இருத்தல் வேண்டும். அத்துடன் பிள்ளைகளின் குடும்ப விவரம், பெற்றோரின் தொழில், பொருளாதாரங்கள், உடல் ஆரோக்கியங்கள் போன்ற பல விவரங்களை ஆசிரியர் அறிந்திருப்பது நல்லதாக அமையும். இங்கே சில விவரங்களை மாணவர்களிடம் கேட்கும் போது மிகவும் அவதானமாக ஆசிரியர் நடந்து கொள்ளுதல் வேண்டும். சில தகவல்களை மாணவர்கள் சக மாணவர்கள் முன்னிலையில் கூறவும் மாட்டார்கள். அவ்வாறான சில தகவல்களை ஆசிரியர், சக மாணவர்களின் முன்னிலையில் வினவுதலையும் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளை தனித் தனியாக அழைத்து திருத்தும் வேளைகள், சந்திக்கும் விளையாட்டு மைதானங்கள் போன்ற சந்தர்ப்பங்கள், இன்னோரன்ன சந்தர்ப்பங்களில் பிள்ளைகளிடம் அவர்களை அறியாமலேயே தகவல்களை பெற கூடியதான உளவியல் அணுகுமுறைகளை கையாளுதல் வேண்டும்.
பிள்ளைகளின் பின்னணிகளை அறிந்த பின்பு அவர்களுக்கு ஏதாவது உதவிகள், ஆறுதல்கள் வழங்கும் சந்தர்ப்பங்களில் சக மாணவர்களுக்கு தெரியா வண்ணம் அந்த உதவிகளை மேற்கொள்வதே சிறந்தது. மேலும் ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர் பல்வேறு நடிபங்குகளை ஏற்பவராக இருத்தல் வேண்டும். தாயாக, தந்தையாக, தாதியாக, நண்பனாக, நடிகராக, வழிகாட்டியாக என பல பாத்திரங்களை ஏற்று சேவை புரியும்போது மாணவர்கள் ஆசிரியர்களை கூடியளவில் நேசிப்பதுடன் தமது தனிப்பட்ட குறை, நிறைகளைக் கூட ஆசிரியர்களிடம் கூறி சிறந்த தீர்வைப் பெற்று நடக்கக் கூடியவர்களாக மாறுவார்கள். அத்துடன் வகுப்பறையில் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைப் பிரயோகங்களிலும் கவனமாக இருத்தல் வேண்டும். எந்த ஒரு பிள்ளையையும் “மொக்கு” என்று பேசுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பிள்ளையிடம் ஒரு திறன் இல்லாவிட்டால் இன்னொரு திறன் மேலானதாக இருக்க முடியும் மேலும் தேர்வுகள், போட்டிகள், மதிப்பீடுகளில் பின்தங்கி நிற்கும் மாணவர்களையும் ஆசிரியர்கள் தமது அன்பான பேச்சுக்களினாலும் அரவணைப்பினாலும் முன்னிலைக்கு வரச்செய்ய முடியும். போட்டி ஒன்றில் சற்று பின்தங்கிய பிள்ளையிடம் உன்னால் முடியும். முயற்சி செய்தால் அடுத்த தடவை வெற்றி பெற முடியும் என்றும் பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற பிள்ளையிடம் இந்த பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து பயிற்சியடைவதுடன் இன்னும் கவனம் எடுத்தால் அடுத்த பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற முடியும் என்றும் பேச்சுப் போட்டி ஒன்றில் பங்குபற்றி வெற்றிச் சந்தர்ப்பத்தை இழந்த பிள்ளையிடம் உங்கள் பேச்சு நன்றாக இருந்தது, எனினும் சில விடயங்களை எடுத்துக்காட்டி இவற்றில் கூடிய கவனமெடுத்தால் இனிவரும் போட்டிகளில் இடம் கிடைக்க முடியும் என்ற பல உற்சாகப்படுத்தும் உபாயங்களைக் கூறி மாணவர்களைத் தட்டிக் கொடுத்து இவர்களை உற்சாகப்படுத்துபவர்களாக இருத்தல் வேண்டுமே தவிர இந்த மாணவர்களினால் ஒன்றுமே முடியாது என்ற நிலையில் இருத்தல் கூடாது.
இலைமறை காய்களாக மாணவர்களிடம் மறைந்திருக்கும் உள்ளார்ந்த திறன்களை வளர்த்தெடுத்து அவர்களை வெற்றிப்படிகளின் உச்சத்திற்கு உயர்த்துவதிலும் அறிவில் கரைகாண வைப்பதிலும் நல்லாசிரியர் ஏணியாகவும் தோணியாகவும் தொழிற்படுவார் என்றால் மிகையில்லை.
இந்த வகைகளில் நோக்கும்போது ஆசிரியர் என்பவர் தனது சிறப்பான சேவைகளின் மூலம் ஒரு பிள்ளை (மாணவர்) மனப்பாங்கில் நேரான மாற்றங்களை உண்டுபண்ணி மாணவனை நாளாந்தம் பாடசாலைக்கு வெறுப்பின்றி விருப்புடன் சமுகமளித்து கற்றல்– கற்பித்தல் செயற்பாடுகளில் சுமுகமாக ஈடுபட வைத்தார் என்றால் இந்த ஆசிரியர் தனது சேவையில் வெற்றி கண்டவராகவே கருதப்படுவார். மாணவச் செல்வங்களினால் இவர்கள் மதிப்புடன் போற்றப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
பண்பும் பணிவும் மிக்க ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததே. மாவீரன் நெப்போலியன் கூறியது போல “உன்னால் முடியாதது என்று ஒன்றுமில்லை” என்று மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். அணுவிஞ்ஞானி அமரர் டாக்டர் அப்துல் கலாம் கூறியதுபோல மாணவர்களின் சிந்தனை சக்தியை தூண்டி அவர்கள் வளர்ச்சிப் பாதையில் “கனவு காண வையுங்கள்” மேலும் அவர் கூறியது போல “’மனிதனின் பிறப்பு ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக அமைய வேண்டும்” என்பதற்கேற்ப ஆசிரியர்கள் தமது அர்ப்பணிப்பான சேவையின் மூலம் சரித்திர நாயகர்களாக போற்றப்படுவீர்கள். ஏழு பிறப்பிற்கும் “ஞானவிசைக்குகனாகவே” அணையாத தீபங்களாக ஒளி வீசுவீர்கள் என்பதில் ஐயமில்லை. “கல்வியே கண்”
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM