(எம்.ஆர்.எம்.வசீம்)
1994 க்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி செய்த 2015 வரையான காலத்தில் டொலர் பெற்றுக்கொள்ள ஒரு தொழிற்சாலையையேனும் ஏற்படுத்தவில்லை.
அவ்வாறு ஏற்படுத்தி இருந்தால் முடியுமானால் காட்டட்டும். இன்றைய டொலர் பிரச்சினைக்கும் இதுவே காரணம் என ஐக்கிள மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் டொலர் பிரச்சினை மற்றும் அதனை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்த தவறியமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி மூலம் மாதத்துக்கு ஆயிரம் டொலர் மில்லியன் வரை பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அதில் 350 மில்லியன்டொலர் எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடடுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேபோன்று அந்த 350 மில்லியன் டொலர்களில் 70வீதம் வாகனங்களுக்கும் 21வீதம் மின்சாரத்துக்கும் 4வீதம் தொழிற்சாலைகளுக்கும் செலவிடப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லை என்பது தற்போது தெளிவாகின்றது.
அதேபோன்று ஜனாதிபதியின் செளபாக்கிய வேலைத்திட்டத்திலும் இதுதொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுவே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.
ஆனால் தற்போது வெள்ளையர்கள் இல்லாமல், அதாவது சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு தொழிற்சாலைகளை அமைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் வார்த்தைகளால் தெரிவித்தாலும் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.
மேலும் 1994க்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும்போது எமது ஏற்றுமதி, மொத் உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 32ஆக இருந்தது. ஆனால் அது மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்தில் நூற்றுக்கு 12க்கு குறைந்தது.
தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ்வின் இரண்டு வருட காலத்திலும் எமது ஏற்றுமதி வருமானத்துக்கு தொழிற்சாலைகளின் பங்களிப்பு இருக்கவில்லை.
கடந்த 15முதல் 20 வருடங்களுக்கு பொதுஜன பெரமுன ஆட்சி செய்த காலத்தில் டொலர் இறக்குமதி அல்லது சம்பாதித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
அத்துடன் தற்போதும் எமது நாட்டுக்கு டொலர் வருவது ஜே ஆர். ஜயவர்த்தன காலத்தில் அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக நிலையம், வெளிநாட்டு தொழில், காமினி திஸாநாயக்கவின் மகாவலி அபிவிருத்தி காரணமாக எமது விவசாய பயிர்களின் ஏற்றுமதி, ரணசங்க பிரேமதாசவின் ஆடை தொழிற்சாலை போன்றவற்றில் இருந்தாகும்.
இதனை தவிர 1994க்கி பின்னர் மஹிந்த ராஜபக்ஷ் அட்சி செய்த 2015வரை டொலர் சம்பாதித்துக்கொள்ள ஒரு தொழிற்சாலையையேனும் அமைக்கவில்லை. அவ்வாறு அமைத்திருந்தால் ஒரு தொழிற்சாலையை காட்டட்டும்.
இதுதான் இன்றைய டொலர் தட்டுப்பாட்டுக்கு தாக்கம் செலுத்தி இருக்கின்றது.
ஆனால் 2015 முதல் 2019வரையா எமது காலத்தில் புத்தாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு சட்ட திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டோம்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷ்வுக்கு முடியாமல்போயிருக்கின்றது என்றார்.