Published by T. Saranya on 2022-01-24 10:48:10
(க.கிஷாந்தன்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் லயன் குடியிருப்பில் இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

14 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இதனால் இந்த வீட்டில் இருந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.