(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க தலைமைத்துவத்திலான 43ஆவது படையணியின் 'உயர்வோம்,உயர்த்துவோம்' நூல் வெளியீட்டு மாநாடு 24 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன்,தலதா அதுகோரல,குமார வெல்கம ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன,ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க,பேராசிரியர்களான மலித் ஜயதிலக,சரத் விஜயசூரிய ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

மற்றும் தொழிலதிபர்கள், துறைசார் நிபுணர்கள்,கலைஞர்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் உட்பட சுமார் 3000ஆயிரம் பேர் கலந்துக் கொண்டார்கள்.

மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் 43 ஆவது படையணியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரைத்தார்கள்.

அதனை தொடர்ந்து 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறப்பு உரையாற்றினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை,கடந்த கால பொருளாதா நிலைமை,எதிர்காலத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைமை மற்றும் அதற்கு தீர்வு குறித்து நீண்ட உரையாற்றினார்.

நாடு எதிர்க்கொண்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்காக 43அவது படையணியின் கொள்கை திட்டங்களை உள்ளடக்கிய 'உயர்வோம் உயர்த்துவோம்'நூலின் உள்ளடக்கத்தை அவர் தெளிவுப்படுத்தினார்.

5 பிரதான கொள்கை திட்டத்தின் ஊடாக நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும் என குறிப்பிட்டார்.

மனிதநேயம்,அறிவு திறன்,அரசியல்,பொருளாதாரம்,கலாசாரம் மற்றும் சமூகம் புதிய வாழ்க்கையை அடைதல் ஆகிய கொள்கையினை அடிப்படையாக கொண்டதாக 43 ஆவது படையணி தோற்றம் பெற்று 1 வருடம் பூர்த்தியாகியுள்ளதையும்,இடைப்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டை வளமான ஜனநாயக குடியரசாக கட்டியெழுப்ப மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள்,கோட்பாடுகள் குறித்து நடைமுறை மற்றும் அறிவுசார் தீர்வினை காணும் நோக்கில் 43 ஆவது படையணி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.