(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் தென் ஆபிரிக்கா முழுமையாகக் கைப்பற்றியது.

குவின்டன் டி கொக் குவித்த சதம், ரசி வென் டேர் டுசென் பெற்ற அரைச்சதம் ஆகியவற்றின் உதவியுடன் தென் ஆபிரிக்கா 49.5 ஓவர்களில் 287 ஓட்டங்களைக் குவித்தது.

13ஆவது ஓவரில் தென் ஆபிரிக்காவின் 3ஆவது விக்கெட் சரிந்தபோது மொத்த எண்ணிக்கை 70 ஒட்டங்களாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக், ரசி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஆனால், தென் ஆபிரிக்காவின் கடைசி 7 விக்கெட்கள் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

குவின்டன் டி கொக் 12 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 124 ஓட்டங்களையும் ரசி வென் டேர் டுசென் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைவிட டேவிட் மில்லர் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் ப்ராசித் கிருஷ்ணா 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வி அடைந்து தொடரை முழுமையாக பறிகொடுத்தது.

மொத்த எண்ணிக்கை 18 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான கே. எல். ராகுல் (9) ஆட்டமிழந்தார்.

எனினும் ஷிக்கர் தவானும் விராத் கோஹ்லியும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தயாவுக்கு உற்சாகம் ஊட்டினர்.

தவான் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட் வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.

தொடர்ந்து விராத் கோஹ்லி 65 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் (26), சூரியகுமார் யாதவ் (39) ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதிலும் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறினர்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க 40ஆவது ஓவரில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து 7ஆம் இலக்க வீரர் தீப்பக் சஹால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்காக போராடினார். அவர் 34 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றிக்கான அற்பசொற்ப நம்பிக்கை அற்றுப்போனது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அண்டைல் பெலுக்வாயொ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லுங்கி நிகிடி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குவின்டன் டி கொக் வென்றெடுத்தார்.