(ஆர்.யசி)

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 87 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டும் சுகாதார தரப்பினர் நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலாத்துறைக்காக நாடு திறக்கப்பட்டுள்ளமை அச்சுறுத்தல் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Articles Tagged Under: ஓமிக்ரோன் தொற்று | Virakesari.lk

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தரவுகள் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் அவதானிப்புகள் குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,

நாட்டில் கொவிட்- 19 வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் நாட்டில் 75 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் மொத்தமாக ஐயாயிரத்தி 391 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களில் எண்ணூறுக்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

இதே காலகட்டத்தில் மொத்தமாக 87 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன. ஆகவே நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனை பொதுமக்கள் அவதானத்தில் கொள்ள வேண்டும், மக்கள் பொறுப்பில்லாது செயற்படும் வேளையில் நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் உள்ளது.

இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டுள்ளது. டெல்டா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான நிலையில் வைரஸ் அதன் வீரியத்தை அதிகரித்துக்கொண்டு வேகமாக பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. 

எனவே மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை போலவே சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் என்பன கட்டாயமாகும் என்றார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் தலைவர் பத்மா குணரத்த இது குறித்து தெரிவிக்கையில், உலக நாடுகளில் பிரதான வைரஸ் தொற்றாக ஒமிக்ரோன் வைரஸ் பரவிக்கொண்டுள்ளது.

பல நாடுகள் இன்றும் இறுக்கமான தீர்மானங்களை முன்னெடுத்து நாட்டில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதுமட்டுமல்ல சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது, சுற்றுலாத்துறைக்காக இடம் வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு வரும் நபர்களுக்கு முறையாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதேபோல் நாட்டில் பொது இடங்களில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியான விதத்தில் அமையவில்லை.

மக்கள் முகக்கவசம் அணியாது, பொது வெளிகளில் சமூக இடைவெளிகளை பின்பற்றாது செயற்பட்டுக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே மக்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்பதையே எம்மால் வலியுறுத்த முடியும். தமது பாதுகாப்பு மற்றும் ஏனையவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை சகலருக்கும் உள்ளது என்றார்.