அனைவரையும் உள்ளடக்கிய நவீன இலங்கையின் எழுச்சியைக் காணவே பிரிட்டன் விருப்பம் - அமைச்சர் தாரிக் அஹமட்

By T Yuwaraj

23 Jan, 2022 | 06:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவது அவசியம் எனும் அதேவேளை, சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது மிகவும் இன்றியமையாததாகும் என்று பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார். 

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பன்னாட்டு தலைவர்கள் வாழ்த்து | Virakesari.lk

அதேவேளை அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து அனைவரையும் உள்ளடக்கிய நவீன இலங்கையைக் கட்டியெழுப்புவதைக் காண்பதற்கே பிரிட்டன் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் இலங்கைக்கான விஜயத்தின்போது சந்திப்புக்களை மேற்கொண்ட தரப்பினர் மற்றும் அவர்களுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர் தாரிக் அஹமட் மேலும் கூறியிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் சவால்களைத் தோற்றுவித்திருக்கும் கொவிட் - 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அவசியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்கூடிய இலங்கைக்கான மூன்று நாட்கள் விஜயம் முடிவிற்கு வந்துள்ளது.

இவ்விஜயத்தின்போது இலங்கையின் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் சந்தித்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். கொழும்பில் மாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல்வேறு தரப்பினரைச் சந்தித்தேன்.

 ஆகவே நான் தலைநகர் கொழும்பிற்கு மாத்திரம் விஜயம் செய்யவில்லை. மாறாக வடக்கு, கிழக்கிற்கும் விஜயம் செய்தேன்.

என்னைப் பொறுத்தமட்டில் எமது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு மேலும் வலுப்படுத்திக்கொள்வது என்பதே மிகவும் முக்கியமான விடயமாகும். அந்தவகையில் இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளைச் சந்திக்கமுடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இவற்றுடன் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அடிப்படைகள் என்னவென்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

வேறுபட்ட சமூகங்கள் மற்றும் பல்வேறு மக்களின் கூட்டிணைவே இலங்கையாகும். இங்கு வயது முதிர்ந்தவர்களிடமிருந்து மாத்திரமன்றி இளையோரிடமிருந்தும் பலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.

இலங்கைக்கான விஜயத்தின்போது மிகவும் தைரியமான, விடாமுயற்சியுடைய பல மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் சந்தித்தேன். அவர்கள் தாம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

 அதுமாத்திரமன்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அனைவரையும் உள்ளடக்கிய நவீன இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களது எதிர்பார்ப்பு குறித்தும் பகிர்ந்துகொண்டனர். இலங்கையின் பங்காளியாகவும் நட்புநாடாகவும் விளங்கும் பிரிட்டனும் அதனையே காணவிரும்புகின்றது.

இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் நான் சந்தித்த வெவ்வேறுபட்ட சமூகங்களின் பிரதிநிதிகளுடன் கல்வி, சுற்றுச்சூழல், முதலீட்டு வாய்ப்புக்கள், பொருளாதாரம் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினேன். 

அதுமாத்திரமன்றி பிரிட்டனின் மனித உரிமைகள்சார் அமைச்சர் என்றவகையில் இலங்கைக்குள் சிவில் மற்றும் மனித உரிமைகளின் முக்கியத்துவம் குறித்தும் இறந்தகாலத்தில் போர் வரலாற்றைக் கொண்டிருக்கக்கூடிய நாட்டில் சமூகங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடினேன்.

நல்லிணக்கம் மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் சமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் என்பன தொடர்ந்தும் அவதானத்திற்குரிய கூறுகளாக இருந்துவரும் அதேவேளை, இலங்கைக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமளவான வாய்ப்புக்களை வழங்கக்கூடியவையாகவும் காணப்படுகின்றன. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 'கோப் 26' மாநாட்டிற்கு ஏனைய உலகத்தலைவர்களுடன் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் வருகைதந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனது விஜயத்தின்போது அரச மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த கலந்துரையாடல்களின்போது இலங்கையில் உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படக்கூடிய பல்வேறு செயற்திட்டங்களை பார்வையிடமுடிந்தது.

ஐக்கிய இராச்சியத்தைப்போன்று ஓர் தீவாக இருக்கக்கூடிய இலங்கையில் நீரேரிகளைப் பாதுகாப்பதற்காக சிலவகைத்தாவரங்கள் பயிரிடப்பட்டிருப்பதை சதுப்புநிலம் சார்ந்து முன்னெடுக்கப்படும் திட்டங்களில் அவதானித்தேன். அதுமாத்திரமன்றி நிலைபேறான சக்திவலு உற்பத்தி, அதற்கான மாற்றுவழிமுறைகள் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினோம். 

அத்தோடு இச்சந்திப்புக்களின்போது சர்வதேச ரீதியில் எமக்கு முன்னால் இருக்கக்கூடிய சவால்கள், சமூகத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் எமது இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது. 

மனித மற்றும் சிவில் உரிமைகளை வலுப்படுத்தும் அதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சமூகங்களுக்குமான பொருளாதார வாய்ப்புக்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை, வெகுவிரைவில் மீண்டும் விஜயம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன். இருப்பினும் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வலுவானதொரு அத்திவாரம் காணப்படுகின்றது என்பதை இம்மூன்றுநாள் விஜயம் எனக்கு உணர்த்தியது என்று அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right