(நா.தனுஜா)

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட உலக அறிக்கையில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரத்தை எதிர்மறையாக சித்தரிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதும் அதில் தேவையற்றதும் மிகைப்படுத்தப்பட்டதுமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பதும் தமக்குப் பெரிதும் விசனமளிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகள்சார் விடயங்களைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற கட்டமைப்புக்கள் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான விதத்தில் செயற்படும் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றிவருவதாகவும் வெளிவிவகார அமைச்சு  விளக்கமளித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்டு வந்திருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட உலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நிலையான சமாதானத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்துவருவதாகக் கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். 

நாட்டின் அரசியலமைப்பிற்கும் நாடு கொண்டிருக்கக்கூடிய சர்வதேச கடப்பாடுகளுக்கும் அமைவாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டை இலங்கை கொண்டிருக்கின்றது.

பொருளாதார, சமூக, மனிதவள அபிவிருத்தி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளல் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அதன் மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டிருக்கின்றது.

உள்நாட்டில்  இயங்கும் சுயாதீன கட்டமைப்புக்கள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் என்பன இச்செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தின.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தம், பொறுப்புககூறல் செயன்முறை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதிகளை விடுவித்தல், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆகிய விடயங்களையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான பதிலில் முன்னிலைப்படுத்த விரும்புகின்றோம். 

மேலும் எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு நாம் பெரிதும் மதிப்பளிக்கின்றோம். அதுமாத்திரமன்றி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களது பங்களிப்பையும் பெற்றுக்கொண்டுள்ளோம். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான எமது நீண்டகால ஒத்துழைப்பு தொடரும் என்பதுடன் உள்நாட்டுப்பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிசெய்யப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்குகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.