(ஆர்.யசி)

நாடு நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு பண வீக்கம் ஏற்படும் நிலை ஏற்படுவதுடன் பணத்தை அச்சடித்து கொண்டு செல்ல தள்ளுவண்டிகளே அவசியப்படும் நிலையொன்று ஏற்படும்.

அதுமட்டுமல்ல நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான ரவூப் ஹகீம் சபையில் தெரிவித்தார். 

நாடு இன்று எதிர்கொண்டுள்ள வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் தீர்மானம் மற்றும் செயற்பாடுகளே காரணமாகும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து நாம் எவ்வாறு வெளிவரப்போகின்றோம் என்பது குறித்து ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் எங்கேயும் கூறவில்லை. எப்போது நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என்பதே சகல குடும்பங்களும் கேட்கும் கேள்வியாகும். 

அதேபோல் எரிவாயு வெடிப்பு எப்போது சரிசெய்யப்படும், மருந்து தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடிக்கு என்ன தீர்வு என்பதே சகலரதும் கேள்வியாகும். நாடு மிக விரைவில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படப்போகின்றது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

சகல செயற்பாடுகளும் முடக்கப்படும் நிலை ஏற்படும். அதுமட்டும் அல்ல தள்ளுவண்டிக்கு கூட தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது. ஏனென்றால் நாட்டில் அச்சடிக்கும் ரூபாவை கொண்டு செல்ல தள்ளுவண்டிகளே அவசியப்படும் நிலையொன்று ஏற்படும்.

தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சரியான தீர்மானம் எடுத்தாக வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே எடுக்கப்படுகின்றது. அரசாங்கம் இப்போது வரையில் எடுத்துள்ள தீர்மானங்கள் அனைத்துமே தீங்கானதாகவே அமைந்துள்ளது.

முறையான ஆலோசனைகளை பெற்று நாட்டின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக அமையவில்லை. அதன் விளைவாக வெளிநாட்டு கையிருப்பு இல்லாது போயுள்ளது. 

இதனால் உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, பண வீக்கம், அதற்காக பணத்தை அதிகமாக அச்சடிக்க வேண்டிய நிலை, எரிவாயு தட்டுப்பாடு இவ்வாறு பல்வேறு காரணிகளை சுட்டிக்காட்ட முடியும். அரசாங்கம் தனது தீர்மானம் எடுக்கும் தரப்பினர் விடும் தவறுகளே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

இந்த நிலையில் சர்வதேச தொற்றுநோயை ஒரு சாட்டாக இந்த அரசாங்கம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் இலங்கைக்கு மட்டுமே தாக்கத்தை செலுத்தவில்லை. 

ஏனைய பல நாடுகளும் இதற்கு முகங்கொடுத்தாலும் அவர்கள் வெகுவாக இந்த சவால்களில் இருந்து மீண்டுள்ளனர். நாம் அவ்வாறு அல்ல, நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுள்ளோம்,  இதற்கு கட்டமைக்கப்பட்ட தீர்மானங்கள் இல்லாதமையே பிரதான காரணமாகும். 

ஆகவே எமது நாடு இன்று எதிர்கொள்ளும் வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் தீர்மானம் மற்றும் செயற்பாடுகளே காரணமாகும்.

ஆகவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்றால் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் ஒன்றும் பூச்சாண்டி அல்ல. அதேபோல் அரசியல் ரீதியிலான தீர்மானம் எடுக்கவும் மாட்டார்கள். 

இலங்கைக்கு இப்போது எது தேவையோ அதனையே சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும். அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலமாக எம்மால் படுகுழியில் விழுவதில் இருந்து மீள முடியும் என்றார்.