(நா.தனுஜா)

வெளிநாடுகளினதோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தினதோ பொருளாதார நிபுணர்களின் துணையின்றி, கடன் வழங்குனர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவகையில் நாட்டின் கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஏனைய நிதி உட்பாய்ச்சல்களுடன் பிணைமுறிகளுக்கான கொடுப்பனவையும் செலுத்துவதாக நாம் கூறினோம். எனவே கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டிருக்கின்றோம் என்பதே அதன் அர்த்தமாகும். 

குறிப்பாக நாம் ஒரு கடனை மீளச்செலுத்தியிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் நாணயச்சபையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை (20) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கடன்களை மீளச்செலுத்துவதை நிறுத்துவதும் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையை அடைவதும் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு கடன்வழங்குனர்களிடம் கோருவதுமே கடன் மறுசீரமைப்பு என்று ஆரம்பத்தில் சிலர் கருதினார்கள். 

ஆனால் குறைவான வட்டிவீதத்திற்குப் பிறிதொரு தரப்பினரிடம் கடனைப்பெற்று, அதன்மூலம் ஏற்கனவே மீளச்செலுத்தவேண்டியிருந்த கடனுக்கான கொடுப்பனவை மேற்கொள்வதும் ஒருவகையான கடன் மறுசீரமைப்பாகும். 

இதுகுறித்து வங்கிகளுக்கு ஆலோசனைகளை வழங்குகின்ற கணக்காய்வாளர்களிடம் வினவுவதன் ஊடாக இதுபற்றி நன்கு புரிந்துகொள்ளமுடியும்.

கடன் மறுசீரமைப்பென்பது மிகவும் நெருக்கடிக்குரிய விடயம் என்றும் அதன் விளைவாக கடன் வழங்குனர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள் என்றும் அதுபற்றி வெளிநாட்டவர்களே ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்றும் அது சர்வதேச கட்டமைப்பொன்றினாலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பலர் கருதுகின்றார்கள். 

எனவே எவ்வித நெருக்கடியும் ஏற்படாதபட்சத்தில் அங்கு கடன் மறுசீரமைப்பு இடம்பெறவில்லை என்ற முடிவிற்கு அவர்கள் வருகின்றார்கள். ஆனால் உண்மையில் புதிய நிதி உட்பாய்ச்சல்கள் இடம்பெறும் பட்சத்தில், அதில் மாற்றங்களைச் செய்வதே கடன் மறுசீரமைப்பாகும். 

எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான செயற்திறனும் இயலுமையும் எமது நாட்டிற்கு இருக்கின்றது.

மத்திய வங்கியில் கலாநிதி பட்டம்பெற்ற 25 பேர் பணியாற்றுகின்றார்கள். அதேபோன்று உலகளாவிய ரீதியிலுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்து, தொழிற்தகைமைப் பூர்த்திசெய்த சுமார் 350 இற்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணியாற்றுகின்றார்கள். 

குறித்தவொரு விடயம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்கு நிபுணர் ஒருவர் தேவைப்படும் பட்சத்தில் அவர் வெளிநாட்டிலிருந்தே வரவழைக்கப்படவேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

இல்லாவிட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உரையாற்றுகின்றவர்களை நிபுணர்கள் என்று கருதுகின்றோம். 

ஆனால் உண்மையில் அமைதியான முறையில் பணியாற்றும் மிகச்சிறந்த நிபுணர்கள் இங்கிருப்பதுடன் நாம் அவர்களிலேயே தங்கியிருக்கின்றோம். அவர்களது சேவையை நாம் பெரிதும் வரவேற்கின்றோம் என்று தெரிவித்தார்.