(ஆர்.யசி)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களாகவுள்ள 7091.64 ஹெக்டயர்  நிலங்களை சுவீகரிக்கும்  வர்த்தமானி அறிவித்தல் விட , வன இலாகா திணைக்களம் முயற்சிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் குற்றம் சாட்டியதுடன் இந்த நடவடிக்கையை  உடனடியாக நிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21 )  இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்த  அவர் மேலும் கூறுகையில்,

வன இலாகா திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை அபகரிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நிலங்களை குறி வைத்து அரசும் வன இலாகவும் மோசமாக செயற்படுகின்றன . 

இதன் ஒரு நடவடிக்கையக வன இலாகா திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2749.53 ஹெக்டயரும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2275.61 ஹெக்டயரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில்1764.81ஹெக்டயரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 530.37 ஹெக்டயரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 286.74 ஹெக்டயரும்  வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14.95 ஹெக்டயரும்என மொத்தமாக 7091.64ஹெக்டயர் மக்களுடைய விவசாய நிலங்களை ,அவர்களின் பூர்விக நிலங்களை சுவீகரிக்க வர்த்தமானி அறிவித்தல் விட முயற்சி எடுக்கப்படுகின்றது. 

எனவே இந்த முயற்சியை உடனடியாகநிறுத்த  வேண்டுமென வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.