பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் பிரிட்டன் அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன?

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 05:28 PM
image

(நா.தனுஜா)

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் வாக்களிக்கும் தகுதியுடைய உறுப்புநாடாக அங்கம்வகிக்கக்கூடிய பிரிட்டன் பொருளாதார மறுசீரமைப்புக்களை மாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு தமது ஜனநாயக உரிமைகளையும் சுயநிர்ணய உரிமையையும் அனுபவிக்கக்கூடியவாறான அரசியல் தீர்வைத் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்தி பிரிட்டன் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்றவேண்டும் என்றும் அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

அதுமாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வடமாகாண, கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார். 

அதன் ஓரங்கமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன், அமைச்சர் தாரிக் அஹமட்டைச் சந்தித்ததுடன் இதன்போது இலங்கைவாழ் தமிழ் மக்களின் அவலநிலை மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அவர்களது கோரிக்கை என்பன தொடர்பில் தெளிவுபடுத்தும் கடிதத்தையும் அமைச்சரிடம் கைளித்தார்.

தமிழர்களாகிய நாம் சுயநிர்ணய உரிமைக்காக சுமார் 70 வருடகாலமாகப் போராடிவருகின்றோம். இணைந்த வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் கூட்டம் என்ற அடிப்படையில், எமது தலைவிதி குறித்து நிர்ணயிக்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது. 

இனப்படுகொலைக்கு வழிவகுத்த மிகமோசமான இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையின் சிங்கள - பௌத்த அரசாங்கங்கள் எங்களை நாங்களே நிர்வகிக்கின்ற எமது சுயநிர்ணய உரிமையைத் தொடர்ச்சியாக நசுக்கிவந்திருக்கின்றன.

சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டிருக்கின்றன ஒருமித்த நாடாக இலங்கை இருக்கும் வரையில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனவழிப்பு முடிவிற்குக் கொண்டுவரப்படாது. 

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் அல்லது அதனையொத்த சரத்துக்களை அடிப்படையாகக்கொண்டு வழங்கப்படுகின்ற தீர்வானது நிலைபேறான அமைதிக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்பவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 6 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட செயன்முறையானது பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் நீதியை நிலைநாட்டல் என்பவற்றை நோக்கிய அர்த்தமுள்ள நகர்விற்கு வழிவகுக்கவில்லை. 

இது எவ்வித தண்டனைகளுமின்றி இலங்கையின் தமிழ்ச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கான தைரியத்தை இலங்கை அரசுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் வழங்கியுள்ளது.

மேலும் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இன்னமும் தொடர்வதுடன், உரியவாறான செயன்முறைகளைப் பின்பற்றாமல் தமிழர்கள் மீதான அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் அவர்களை சிறையில் அடைப்பதற்கும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. 

சர்வதேச பிரகடனங்களுக்கு முரணான இச்சட்டத்தின்கீழ் இன்னமும் பெருமளவான தமிழர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான சர்வதேசத்தின் கண்காணிப்புடனான நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்குவதன் ஊடாக ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

அதுமாத்திரமன்றி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் வாக்களிக்கும் தகுதியுடைய உறுப்புநாடாக இருக்கக்கூடிய பிரிட்டன் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். 

அத்தோடு தமது ஜனநாயக உரிமைகளையும் சுயநிர்ணய உரிமையையும் அனுபவிக்கக்கூடியவாறான அரசியல் தீர்வைத் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்தி சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்றவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41