(இராஜதுரை ஹஷான்)

திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சியமைத்த தேசிய அரசாங்கம் முறையற்ற வகையில் நாட்டை நிர்வகித்ததினால் திருடர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.

முறையற்றவர்களுடன் கூட்டணியமைக்க மக்கள் விடுதலை முன்னணியினர் தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதர மற்றும் சமூக பாதிப்பிற்கு கொவிட் -19 வைரஸ் தாக்கம் என குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தனது இயலாமையினை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவத்திற்கும், விவசாயத்துறை எதிர்க்கொண்டுள்ள நிலைமைக்கும் கொவிட் - 19 வைரஸ் தான் காரணமா?

பொது மக்கள் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள்.யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு நிலைமையினை மக்கள் எதிர்க்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானங்கள் முழு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூரநோக்கமற்ற வகையில் சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்துறையினை முழுமையாக இல்லாதொழித்து விவசாயிகளை நடுவீதிக்கி இறக்கி தற்போது மியன்மார்,சீனா ஆகிய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சியமைத்த தேசிய அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்பட்ட காரணத்தினால் திருடர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.அதன் விளைவை முழு நாடும் தற்போது எதிர்க்கொள்கிறது.

அரசாங்கம் தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை அறிந்துக் கொண்டே அரசாங்கம் தேர்தலை பிற்போட்டுள்ளது.தேர்தல் பிற்போட்டுள்ளமைக்கான உரிய காரணத்தை அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்.