சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் வீராங்கனையானமுல்லைத்தீவைச் சேர்ந்த கனேஸ் இந்துகாதேவிக்கு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில், 

நாட்டின் வடபகுதியில் முல்லைத்தீவு மண்ணைச் சார்ந்த கனேஸ்இந்துகாதேவி பெற்ற இவ் வெற்றியானது, நாட்டிற்கு மட்டுமன்றி முழு தமிழ் இனத்திற்கேகிடைத்த பெரும் வெற்றியாகும். 

கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு அடுத்த படியாக சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் கனேஸ்இந்துகாதேவி சாதனை படைத்துள்ளார். இது எமக்கு கிடைத்த பெரும் சாதனையேயாகும்.

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் என்ற இடத்தில் 18.01.2022ல் நடைபெற்ற 25 வயதுக்குற்பட்ட 50,55 கிலோ கிராம் எடைப்பிரிவின் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியிலேயே, கனேஸ் இந்துகாதேவி தங்கம் வென்று சாதனைப் படைத்திருக்கின்றார். 

ஏழ்மை நிலை, வாழ்வாதாரங்களின் பின்தங்கிய போக்கு, யுத்த அவலங்களின் வடுக்கள் மாறாத சூழல் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி வளங்கள், ஆரோக்கியச் சூழல் அற்ற நிலை என்று பட்டியலிட்டு செல்லும் நிலையிலும் சர்வதேச ரீதியில் தங்கம் வென்றதானது பெருமைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்ட மக்களினது பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனது சார்பாகவும்,எனது மக்கள் சார்பாகவும் கனேஸ் இந்துகாதேவிக்கு இனிய நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.