(ஆர்.யசி)

ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்படுவார் என கூறினாலும் அவர் ஹிட்லர் அல்ல, அவர் ஜனநாயகவாதியாவார். ஆனால் இந்த நாட்டை ஆட்சிசெய்ய ஹிட்லர் தான் தேவைப்படுகின்றார்  என காணி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21)  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நாடு பூராகவும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

இன்று உலகின் வல்லரசான சீனாவை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலமே உலகின் முதலாவது பொருளாதார வல்லரசாக மாறியுள்ளனர். 

இதனை எமது அரசாங்கமும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு கிராமத்தை அபிவிருதி செய்து அதன் மூலமாக நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதேபோல் வெவ்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிக்கொண்டுள்ளமை உண்மையே, விலைவாசி அதிகரித்துள்ளது, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கொவிட் சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் மறுக்கவில்லை. 

அரசாங்கமாக இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வேண்டும். இப்போதும் அது குறித்த மாற்று வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிக்கு பின்னர் இது குறித்து துரிதமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சகல மக்களையும் ஒன்றிணைந்து பொருளாதார சாவல்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் விமர்சித்தாலும் ஜனாதிபதி திறமையான அதேபோல் சிறந்த தலைவர் என்பது எமக்கு தெரியும். அவர் எப்போதும் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றார். 

ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்படுவார் என கூறினாலும் அவர் ஹிட்லர் அல்ல, அவர் ஜனநாயக வாதியாவார். ஆனால் நாட்டின் இன்றைய நிலைக்கு நாட்டை ஆட்சிசெய்ய ஹிட்லர் தான் வேண்டும். 

தொழிற்சங்கங்கள் நாட்டை குழப்பியடித்துக்கொண்டுள்ள நிலையில், மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் இந்த காலகட்டத்தில் ஹிட்லர் போன்றவர்களின் ஆட்சியே சரியானது என நினைகின்றோம் என்றார்.