(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ சிறந்த தீர்மானங்களை முன்னெடுத்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவதற்கான அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி விடுத்த அழைப்பினை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் பொதுவான பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம்.ஒரு சில தீர்மானங்கள் தவறாகியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.தவறுகளை திருத்திக் கொண்டு செயற்படுவது பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என்றார்.