ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு இல்லை - முன்னிலை சோசலிசக் கட்சி

20 Jan, 2022 | 04:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எத்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் தாக்கத்தை பொது மக்கள் எதிர்வரும் மூன்று ஆண்டு காலமும் எதிர்க்கொள்ள நேரிடும் என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் பொது மக்கள் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் கொவிட் தாக்கம் தான் மூல காரணம் என குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் தனது இயலாமையினை மறைத்துக் கொள்கிறது.

இலங்கையை காட்டிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள நாடுகள் கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படவில்லை.

பங்களாதேஷ்,நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளன.

ஆனால் இலங்கையின் பொருளாதாரம் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எத்திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை.அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் தாக்கத்தை நாட்டு மக்கள் எதிர்வரும் மூன்று வருட காலத்திற்கு எதிர்க்கொள்ள நேரிடும்.

எதிர்காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் ஒவ்வொன்றாக பொய்யாக்கப்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right