இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை  மீன்வளத் துறை அதிகாரியிடம் பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு சென்ற இலங்கை ரோந்து கப்பலுடன்  தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மோதிதாக கூறப்படுகிறது.

இதனால் விசைப்படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மற்றொரு விசைப்படகு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.

இதனால் ஜெயபாலன், சுரேந்திரன், ஆகாஸ், டைட்டஸ், சேதுராமன், டேனியல், புதில் மென் உள்ளிட்ட 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கப்பல் மோதி விசைப்படகு மூழ்கடிப்பது,  மீனவர்கள் சிறை பிடிப்பது நடைபெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மத்திய மாநில அரசுகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டுக் கொடுப்பதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.