பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச்  செய்திகள்

இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவிகள் மத்தியில் அச்சம் நிலவி வந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியிலுள்ள பெற்றோர் மற்றும் மாணவிகள் மிக அவதானத்துடன் இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான பின்னணியில், பண்டாரவளையிலிருந்து ஹீல்ஓய வரை பயணித்த பஸ் ஒன்றில் இருந்த மாணவி ஒருவரின் தலை முடியை வெட்ட குறித்த சந்தேகநபர் முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, பஸ்ஸில் பயணித்தவர்கள், குறித்த சந்தேகநபரை பிடித்து, பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் வசமிருந்த பயணப் பையிலிருந்து, பாடசாலை மாணவிகளுடையது என சந்தேகிக்கப்படும் தலைமுடி, கத்தரிக்கோல் உள்ளிட்ட சில பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.