(என்.வீ.ஏ.)

வருடத்தின் ஐ.சி.சி. ஆடவர் இருபது - 20  அணியில் இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, அல்லது சகலதுறைகளில் தங்களது அதிசிறந்த ஆற்றல்களை கடந்த வருட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்திய 11 வீரர்கள் ஐசிசியினால் அடையாளம் காணப்பட்டு வருடத்தின் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Wanindu Hasaranga among ICC's four nominees for T20I Player of the year  award - Sri Lanka Cricket

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறந்த சுழல்பந்துவீச்சாளராக தன்னை உயர்த்திக்கொண்ட வனிந்த ஹசரங்க துடுப்பாட்டத்திலும் சிறந்த பங்களிப்பு வழங்கக்கூடியவர். 

கடந்த வருடம் முழுவதும் திறமையை வெளிப்படுத்திய வனிந்து ஹசரங்க, ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது உச்ச நிலையை அடைந்தார். 

உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஹெட்-ட்ரிக் அடங்கலாக மொத்தம் 16 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹசரங்க, அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் கடந்த வருடம் 20 போட்டிகளில் விளையாடிய ஹசரங்க மொத்தமாக 36 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் துடுப்பாட்டத்தில்196 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

இவர் ஐசிசி வருடத்தின் இருபது 20 அணியில் 7ஆம் இலக்க வீரராக இடம்பெறுகின்றார்.

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் தலைவராக பெயரிடப்பட்டுள்ள இந்த அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.

ஐசிசி அணியில் இடம்பெறும் வீரர்கள் துடுப்பாட்ட வரிசை பிரகாரம்

ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து - உலகக் கிண்ணத்தில் அதிகூடிய 269 ஓட்டங்கள்).

மொஹமத் ரிஸ்வான் (பாகிஸ்தான் - விக்கெட் காப்பாளர் - 2021இல் 29 போட்டிகளில் 1,326 ஓட்டங்கள்).

பாபர் அஸாம் (தலைவர்- பாகிஸ்தான் - 2021இல் 29 போட்டிகளில் 939 ஓட்டங்கள்).

ஏய்டன் மார்க்ராம் (தென் ஆபிரிக்கா - 2021இல் 18 போட்டிகளில் 570 ஓட்டங்கள்).

மிச்செல் மார்ஷ் (அவுஸ்திரேலியா - 2021இல் 21 போட்டிகளில் 627 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்)

டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா - 2021இல் 17 போட்டிகளில் 377 ஓட்டங்கள்).

வனிந்து ஹசரங்க டி சில்வா (இலங்கை - இ-20 பந்துவீச்சு தரவரிசையில் 1ஆம் இடம்).

தப்ரெய்ஸ் ஷமசி (தென் ஆபிரிக்கா - 2021இல் 22 போட்டிகளில் 36 விக்கெட்கள். இ20 பந்துவீச்சு தரவரிசையில் 2ஆம் இடம்)

ஜொஷ் ஹேஸ்ல்வூட் (அவுஸ்திரேலியா - 2021இல் 15 போட்டிகளில் 23 விக்கெட்கள்).

முஸ்தாபிஸுர் ரஹ்மான் (பங்களாதேஷ் - 2021இல் 20 போட்டிகளில் 28 விக்கெட்கள்).

ஷஹீன் அப்றிடி (பாகிஸ்தான் - 2021இல் 21 போட்டிகளில் 23 விக்கெட்கள்)

மகளிர் இருபது 20 அணி

இது இவ்வாறிருக்க ஐசிசி வருடத்தின் மகளிர் இருபது 20 அணியும் பெயரிடப்பட்டுள்ளது.

அவ்வணியின் தலைவியாக இங்கிலாந்தின் நட்டாலி ரூத் சிவர் பெயரிடப்பட்டுள்ளார்.