குமார் சுகுணா
தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக மிருகங்கள், பறவைகள் என்பன எப்போதும் இருக்கின்றன. அந்தவகையில் பறவைகளில் சேவல் என்பது நமது கலாசாரத்தோடு எப்போதும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது.
தமிழர்களின் கடவுளான முருகனின் கொடியாக இருப்பதும் சேவல்தான். இதனால் சேவல் நமது வழிப்பாட்டுடன் தொடர்புடையதாக வும் உள்ளது. இந்த சேவலை தமது செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களும் உள்ளனர்.
சிலர் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளைகள் போல சேவலை வளர்கின்றனர். அந்தவகையில் மாடகளுக்கு ஜல்லிக்கட்டுப்போல சேவலுக்கு சேவல்கட்டு விளையாட்டு பிரபல்யமானதாகவும் பண்டைய காலம் தொட்டு நமது வாழ்க்கையோடு இணைந்து வந்தள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் போல, சேவல்கட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் கரூர் மாவட்டம் பூலாம்வலசு. அந்த ஊரில் பொங்கலை முன்னிட்டு சேவல்கட்டு நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், மற்ற மாவட்டங்களில் சேவல்கட்டு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கவில்லை.
சேவல்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று.
ஜல்லிக்கட்டில் காளையின் திமிலை அடக்குவதுபோல சேவல்கட்டில் மனிதர்களின் குறுக்கீடு எதுவும் இல்லை. சேவல்களுக்கு இடையே நடக்கும் சண்டையை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதி.
இரண்டு பறவைகளுக்கிடையில் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது அவற்றைத் துன்புறுத்துவது ஆகாதா என்றொரு கேள்வியும் எழலாம்.
ஆனால், ஜல்லிக்கட்டைப் போலவே இந்தப் போட்டிக்குப் பின்னாலும் வலுவான காரணம் உண்டு. கால்நடை வளர்ப்பைப் போலவே கோழி வளர்ப்பும் விவசாயிகளின் இணைத் தொழில்.
தகுதிபெற்ற உயிர்கள் மட்டுமே வாழும் என்ற இயற்கை விதியைச் சமாளிக்க ஆடு மாடுகளையும் கோழிகளையும் பழக்கப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே இந்த விளையாட்டுகள் அமைந்திருக்கின்றன.
சேவல்கட்டு சங்க காலத்திலேயே வழக்கத்தில் இருந்த விளையாட்டு என்பதற்கு பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையை உதாரணமாகச் சொல்வது வழக்கம். ‘மேழகம் தகரொடு சிவல் விளையாட என்கிறது பட்டினப்பாலை.
மேழகத் தகர் என்பது ஆட்டுக்கிடாய் என்றும் சிவல் என்பது கெளதாரி என்றும் உரையெழுதியிருக்கிறார் ரா.ராகவய்யங்கார். பன்றி, கோழி, தகர், சிவல் ஆகிய நான்கும் தம்முள் பொருதற்கு உரியன என்றும் அவர் விளக்குகிறார்.
எனவே, பட்டினப்பாலைக் குறிப்பது கெளதாரிச் சண்டையாகவே இருக்க வேண்டும். ஆனால், இன்று தகர் வென்றி எனப்படும் ஆட்டுக்கிடாய் சண்டையும் சிவல் வென்றி எனப்படும் கெளதாரிச் சண்டையும் வழக்கிலிருந்து அழிந்தேவிட்டன.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மட்டுமே ஆட்டுக்கிடாய் சண்டை நடந்துவந்தது. அனுமதி மறுக்கப்படுவதால் அதுவும் இப்போது நடக்கவில்லை. சேவல்கட்டு எனப்படும் கோழிச் சண்டையும் இப்போது வழக்கொழியும் அபாயத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறது.
போரில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு நடுகல் நாட்டுவதைப் போல சண்டையில் உயிரிழந்த சேவலுக்கும் நடுகல் நாட்டும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதற்கு ஆதாரமாக, விக்கிரவாண்டிக்கு அருகிலுள்ள அரசலாபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது.
கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த வட்டெழுத்துக் கல்வெட்டில், சேவல் உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
அதிலுள்ள எழுத்துப் பொறிப்புகளைக் கொண்டு முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில் இறந்துபட்ட சேவலுக்காக நடப்பட்ட கல் என்ற செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.
அதுபோலவே காஞ்சி மாவட்டம் இந்தளூரிலும் கட்டுச் சேவலுக்கு நடுகல் நாட்டப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்று கிடைத்துள்ளது.
வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ திரைப்படம் வெளியானதற்குப் பிறகு சேவல்கட்டு பொதுச் சமூகத்தின் கவனத்தைப் பரவலாகப் பெற்றது. ஆறு தேசிய விருதுகள் வழங்கி அத்திரைப்படம் கௌரவிக்கப்பட்டது.
2001-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ஜெயராஜின் ‘கண்ணகி’ ஷேக்ஸ்பியரின் ‘ஆன்டனி அண்டு கிளியோபாட்ரா’ நாடகத்தைத் தழுவியது என்றாலும் அந்தப் படத்தின் மையமும் சேவல் சண்டைதான். எளிய மனிதர்கள், உழைக்கும் வர்க்கத்தினர்தான் பெரும்பாலும் இந்தச் சேவல் சண்டைகளில் பங்கெடுக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையில் இந்தச் சேவல் சண்டை எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதை இந்த இரண்டு திரைப்படங்களுமே மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.
தமிழில் முதன்முதலாக சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டதும்கூட ம.தவசியின் ‘சேவல்கட்டு’ நாவலுக்குத்தான். மிக சமீபத்தில், ‘சேவல் களம்’ என்ற நாவலை பாலகுமாரன் விஜயராகவன் எழுதியிருக்கிறார்.
கலை இலக்கியங்களில் ஒருபக்கம் சேவல்கட்டைக் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்னொருபக்கம், அந்த விளையாட்டு வழக்கிலிருந்து அற்றுப்போவதைக் காணும் சாட்சிகளாகவும் இருக்கிறோம்.
கிராமங்களில் நடத்தப்படும் சேவல்கட்டுப் போட்டிகள் அப்பகுதியில் வன்முறைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன என்று மாவட்ட நிர்வாகங்கள் காரணங்களைச் சொல்கின்றன.
சேவல்கட்டு நடத்த விரும்பும் கிராமங்களில் பொலிஸார், கால்நடை மருத்துவர்கள் மட்டுமின்றி அந்த ஊரைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி, இந்த இடையூறுகளை எளிதில் தவிர்க்க முடியும்.
இந்தப் போட்டிகளை நடத்துபவர்களிடமிருந்து பொலிஸார் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான செலவுகள் வசூலிக்கப்படுவதோடு சேவை நிறுவனங்களுக்குக் கண்டிப்பாக நன்கொடை அளித்ததற்கான ஒப்புகைச் சீட்டும் கேட்கப்படுகின்றன.
சேவல் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவற்ற விவசாயத் தொழிலாளிகளாக இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டி விதிமுறைகள் தெரிந்திருக்கவில்லை என்பது மேலும் சிக்கலை விளைவிக்கிறது.
ஆயினும் சில இடங்களில் தைப் பொங்கலை முன்னிட்டு சில சேவல் சண்டைகள் நடத்தப்பட்ட செய்திகள் சமூகவலைத்தளங்கள் மூலம் பார்க்க முடிந்தது. ஆயினும் சட்டபூர்வமாக வேல் கட்டு நடத்த அனுமதி கிடைக்க வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு ...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM