(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்கள் நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்று அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறார்கள்.

தேசிய இறையாண்மை,தேசிய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.

மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள ராஜபக்ஷர்கள் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

'திருகோணமலை எண்ணெய் குதங்கள் தேசிய வளத்தை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடன் இரத்து செய்'என்ற தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்திலிருந்து,கோட்டை புகையிரத நிலையம் வரை எதிர்ப்பு பேரணியில் ஈடுப்பட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய வளப்பாதுகாப்பு,நாட்டின் சுயாதீனத்தன்மை ஆகியவற்றை குறிப்பி;ட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளக்கு முரணாக செயற்படுகிறது.நாட்டின் தேசிய வளங்களை முழுமையாக பிற நாட்டவர்களுக்கு கொள்கையினை அரசாங்கம் செயற்படுத்துகிறது.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க இரகசியமாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.நீதிமன்றம் சிறந்த தீர்வினை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் வலுச்சக்தி அமைச்சர் குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.

நாட்டுக்கு சொந்தமாகவிருந்த எண்ணெய் தாங்கிகளை அரசாங்கம் மீண்டும் 50 வருட காலத்திற்கு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

தலைநகரில் உள்ள பெறுமதியான காணிகளை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வருகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தேசிய  வளங்கள் ஏலம் விடப்படுகின்றன.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. 

ராஜபக்ஷர்கள் தேசிய வளங்களை விற்று நாளாந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறார்கள். அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.