(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் உள்ள சகல மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளது. 

இதனால் பிற்பகல் 2.30 மணிமுதல் இரவு  9.30 மணி வரையிலான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

அதன்படி 1 மணித்தியாலமும்,45 நிமிடங்களும் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடாஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சகல மின்நிலையங்களுக்குமான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காலை மற்றும் இரவு வேளைகளில் மின்விநியோகத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளன.

மின்விநியோகத்தின் சமநிலை தன்மையினை பேணுவதற்காக ஒரு தினசரி 1 மணித்தியாலத்திற்கு அதிகமான அளவு மின்விநியோகத்தை துண்டிப்பது அவசியமாகும்.

பிற்பகல் 2.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியில் நாடுதழுவிய ரீதியில் ஒவ்வொரு பகுதிகளையும் உள்ளிக்கிய வகையில் 4 கட்டமாக மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

எவ்வாறாயினும் மருத்துவமனைகள், அத்தியாவசிய மற்றும் அவசரகால பொது சேவைகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என்றார்.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.