(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் தமித் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர்  தாக்கல் செய்துள்ள வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல் நிறைவடைந்துள்ளது. 

இன்றைய தினம் (19) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நெறிப்படுத்தும் சட்டமா அதிபர் தரப்பில் சட்டவாதி இதனை மன்றுக்கு அறிவித்தார்.

இந் நிலையில் வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை ஆராயாது பிரதிவாதிகளை விடுவிப்பதா அல்லது,  பிரதிவாதி தரப்பு சாட்சிகளை அழைப்பதா என்ற தீர்மானத்தை அறிவிக்க வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தமித் தொட்டவத்த அறிவித்தார்.

திவி நெகும் திணைக்களத்துக்கு சொந்தமான 29400000.00 ரூபாவை, தேர்தல்கள் ஆணையாளரின் சுற்று நிருபத்தையும் மீறும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் இதனூடாக அரசாங்க பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்த குற்றப் பத்திரிகை பஷில் ராஜபக்ஷ, கித் சிறி ஜயலத்  ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.