(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதா அல்லது, பிரதிவாதித்தரப்பு சாட்சியங்களை ஆராய அனுமதியளிப்பதா என்பது குறித்த தீர்மானம் அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது. 

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி இது குறித்த நீதிமன்றின் தீர்மானத்தை அறிவிப்பதாக, இந்த வழக்கினை விசாரிக்க என அமைக்கப்பட்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர்  அடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

இந்த வழக்கினை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கானது அந் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது. 

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சி நெறிப்படுத்தலை முடித்துக்கொள்வதாகவும், சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா அறிவித்தார்.

இதனையடுத்தே விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள், வழக்கிலிருந்து பிரதிவாதி ஹேமசிறி பெர்ணான்டோவை விடுதலை செய்வதா அல்லது பிரதிவாதி தரப்பு விடயங்களை ஆராய  அனுமதிப்பதா என்பது குறித்த தீர்மானத்தை பெப்ரவரி 18 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்தனர்.

முன்னதாக தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறியதன் ஊடாக  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித்த, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.