அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கிளென் மெக்ஸ்வெல் 2021-22 பிக் பாஷ் தொடரின் ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை கதிகலங்க வைத்துள்ளார்.

Image

தற்சமயம் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிராக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்கள‍ை குவித்தது.

இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணித் தலைவர் மெக்ஸ்வெல் மொத்தமாக 64 பந்துகள‍ை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களை எடுத்தார்.

மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்ட மட்டையிலிருந்து இந்த இன்னிங்ஸில் 22 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.

மெஸ்வெல் 41 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் பிக் பாஷ் லீக் வரலாற்றில் மிக வேகமாக சதம் அடித்த இரண்டாவது மனிதர் ஆனார். 

இதற்கு முன்னர் கிரேக் சிம்மன்ஸ் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஷ் லீக் வரலாற்றில் வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் அதிகபடியாக பதிவுசெய்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

அதேநேரம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபடியான ஓட்ட எண்ணிக்கையும் 273 இது என்பதுடன் டி-20 கிரிக்கெட் வடிவத்தில் ஒரு அணி பெற்றுக் கொண்ட மூன்றாவது அதிகபடியான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.