மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகும் : அரசாங்கத்தை எச்சரிக்கிறார் கிரியெல்ல

Published By: Digital Desk 3

19 Jan, 2022 | 09:19 PM
image

(ஆர்.யசி)  

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான மோசமான வீழ்ச்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டதில்லை. இந்தநிலை தொடர்ந்தால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். 

நாட்டில்  ஜனநாயகம், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றும் சூழலில் சர்வதேச முதலீட்டாளர்கள் எவ்வாறு நாட்டுக்கு வருவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19), ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததானது,

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் அவரது உரையில் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எதுவும் முன்வைக்கவில்லை.

கடந்தகால சம்பவங்களில் படிப்பினையை பெற்றுக்கொண்டு நிகழ்காலத்தில் வாழுங்கள் என்றே புத்தபெருமான் கூறியுள்ளார்.

எனினும் நாடு இன்று எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி பதில் எதனையும் கூறவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு, எரிபொருள் பிரச்சினைக்கு, மின்சார பிரச்சினை, எரிவாயு பிரச்சினை, மக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகிய பிரதான பிரச்சினைகளுக்கு அவரது உரையில் எந்த தீர்வும் முன்வைக்கவில்லை. 

அவ்வாறான நிலையில் அவரது உரை குறித்து ஆரோக்கியமாக விமர்சிக்க முடியாது. கடந்த காலங்களில் முன்னெடுத்த விடயங்களையும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போவதையும் பேசிக்கொண்டு நிகழ்கால பிரச்சினைகளை கைவிடுவது அர்த்தமற்ற ஒன்றாகும். ஆகவே ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தோல்வியென்றே கூறுவோம்.

தேசிய வளங்களையும், நிலங்களையும் பாதுகாப்போம் என்பதே சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தில் கொடுத்தவற்றையும் மீளப்பெறுவோம் என்றீர்கள். அவ்வாறு கூறியவர்கள் பாராளுமன்றத்தை மூடிவிட்டு திருட்டுத்தனமாக உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டு 80 எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்துள்ளனர். 

எமது ஆட்சிக்காலத்தில் 10 எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்தோம். அதுவும் யுத்தம் உச்சமடைந்திருந்த காலத்தில் அதனை கொடுத்ததன் காரணம் என்னவென்றால், இந்தியாவிற்கு அவற்றை கொடுப்பதன் மூலமாக விடுதலைப்புலிகளின் தாக்குதலை தடுக்கவே அவ்வாறான மூலோபாய தீர்மானம் எடுத்தோம்.

அதுமட்டுமல்ல இலங்கையை முதலீட்டு மையமாக மாற்றுவேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவதற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் சட்ட சுயாதீனம் நாசமாக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் பறிக்கப்பட்டு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல அநீதிகள் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டிற்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் வருவார்களா? நீதிமன்ற கட்டிடங்களை கட்டிக்கொடுக்கலாம், நீதிபதிகளை நியமிக்கலாம் ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய சட்ட சுயாதீனம் பின்பற்றப்பட வேண்டும். 

19 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து சட்ட சுயாதீனத்தை உருவாக்கினோம், நிறைவேற்று அதிகாரத்தில் தலையீட்டை குறைத்தோம், அதனை இன்று மீண்டும் நிறைவேற்று அதிகரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர். நீதிமன்ற சுயாதீனம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. மாறாக பார்த்துக்கொண்டுள்ளவர்களுக்கு அது விளங்கவேண்டும், அவர்களே அதனை கூற வேண்டும். வேறு நாடுகளின் தலைவர்கள், இந்த நாட்டின் எதிர்க்கட்சி இதனை கூற வேண்டும்.

அதேபோல், அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் இதுவரை காலமாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தெரிவுக்குழுவிற்கே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் இன்று என்ன நடந்துகொண்டுள்ளது, ஜனாதிபதியின் தனிப்பட்ட வழக்காடியவர்களை கொண்டு அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்க கூறுகின்றனர். 

பாராளுமன்றத்திற்கு தெரியாமல் அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. 20 ஆம் திருத்தத்திலும் இதுவே நடந்தது. ஆனால் எல்லோராலும் எதனையும் பேசலாம், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.  புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளை தெரிவுக்குழுவிற்கு முன்வைத்து அரசியல் அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எமது ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார், நாம் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம். அவரசமாக அரசாங்கத்தை அமைக்க நாம் முயற்சிக்கவில்லை. தேர்தல் ஒன்றினை நடத்தினால் மக்கள் இது குறித்து தீர்மானம் எடுப்பார்கள். 

ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எமது ஒத்துழைப்புகள் தேவையில்லை, நாம் ஒன்றையும் கேட்க மாட்டோம் என சுயநலமாக செயற்பட்டவர்கள், அதற்கமைய தீர்மானம் எடுத்தவர்கள் இன்று எமது ஒத்துழைப்பை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வேலைசெய்ய தெரிந்தவருக்கு ஒரு நாள் போதும், வேலைசெய்ய தெரியாதவர்களுக்கு எத்தனை காலம் கொடுத்தும் அர்த்தமில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதுதான் நடந்துள்ளது. எமது ஆட்சியில் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை இவர்கள் திறந்து வைத்துக்கொண்டுள்ளனர். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சி செய்தன, ஆனால் எந்த அரசாங்கத்திலும் நாடு வீழ்ச்சி காணவில்லை. 

ஆனால் இன்று நிலைமை அவ்வாறு அல்ல. நாடு வீழ்ச்சி கண்டால் சகலதும் நாசமாகும். மக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலைமை ஏற்படும். அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இராச்சியம் வீழ்ச்சி கண்டால் சட்டம் ஒழுங்கு முழுமையாக வீழ்ச்சி காணும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11