(நா.தனுஜா)

பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் எரிபொருள் இல்லாததன் காரணமாக மின்விநியோகம் தடைப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பளவான இலாபத்தைத் தரக்கூடிய பிணைமுறிகளுக்கான கொடுப்பனவாக 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலுத்தியிருக்கின்றது. 

இதனூடாக கறுப்புப்பணத்தை சட்டபூர்வ பணமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஆகவே இந்தக் கொடுப்பனவு யாருக்குச் செலுத்தப்பட்டது என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் தெளிவுபடுத்தவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையை செவிமடுத்தபோது, புதிதாக பதவியேற்ற ஜனாதிபதியொருவர் தமது கொள்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கின்றார் என்றே கருதத்தோன்றியது. 

ஆனால் தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன என்பதை அவர் நினைவில்கொள்ளவேண்டும்.

அதன்படி அவரது கொள்கை விளக்கவுரையில் நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதேபோன்று தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பிலும் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

தற்போது எமது நாடு இரு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அவற்றில் முதலாவது பொருட்களின் சடுதியான விலையேற்றமாகும். அண்மையகாலங்களில் மரக்கறிகள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப்பொருட்களினதும் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. 

ஒருபுறம் விலைகள் அதிகரித்தாலும் மறுபுறம் சந்தையில் அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இப்பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி அவரது கொள்கை விளக்கவுரையில் முன்வைக்கவில்லை. அதேபோன்று இரண்டாவதாக நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. 

எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தம்மிடம் டொலர் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் எரிபொருள் இல்லாததன் காரணமாக மின்விநியோகம் தடைப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பீட்டளவில் மிகவும் சொற்பளவான இலாபத்தைத் தரக்கூடிய பிணைமுறிகளுக்கான கொடுப்பனவாக 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் செலுத்தியிருக்கின்றது. 

ஆகவே இந்தக் கொடுப்பனவு யாருக்குச் செலுத்தப்பட்டிருக்கின்றது என்ற நியாயமான கேள்வி எமக்கு எழுந்துள்ளது. ஏற்கனவே பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்ட கறுப்புப்பணத்தை இதனூடாக சட்டபூர்வ பணமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 

நாம் ஆளுந்தரப்பில் இருந்திருந்தால் கடன்வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடன்களை மீளச்செலுத்துவதற்கு மேலும் கால அவகாசத்தைப் பெற்றிருப்போம்.

இலங்கை மின்சாரசபைக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்குமாறு மின்சக்தி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையில் இந்தியாவிடமிருந்து நிதியுதவியைப் பெறுவதாகவும் அதனை அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தமுடியும் என்றும் அரசாங்கம் கூறியது. 

அதேபோன்று ஏற்கனவே இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்த எண்ணெய்த்தாங்கிகளை தாம் மீளப்பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் நாடகமொன்றை அரங்கேற்றுகின்றது. ஆனால் அதில் எவ்வித உண்மையுமில்லை. 

எனவே வலுவானதொரு இடத்திலிருந்துகொண்டு வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காததன் விளைவாக எமது நாடு எதிர்வருங்காலங்களில் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

மேலும் தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு மனித உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும் தான் இடமளிக்கவில்லை என்று ஜனாதிபதி அவரது கொள்ளை விளக்கவுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது ஆட்சியின் கீழேயே பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி எமது கட்சியின் உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் 9 மாதங்கள்வரையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 

அதேபோன்று சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொதுமக்களினதும் மனித உரிமைகளை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதற்கு இதேபோன்று மேலும் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. 

ஆகவே உண்மையில் அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்றதா? இல்லை? என்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொதுமக்களுமே கூறவேண்டும் என்றார்.