(எம்.மனோசித்ரா)

பொருளாதார சூறாவளியில் சிக்கியுள்ள நிலைமையிலும் , தடைகளைத் தாண்டி 500 மில்லியன் டொலர் பிணை முறி கடனை மீள செலுத்தியுள்ளோம். 

எதிர்காலத்திலும் இவ்வாறு கடன்களை மீள செலுத்துவோம் என்று அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

18 ஆம் திகதி செவ்வாய்கிழமை அன்று செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்று 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

500 மில்லியன் டொலர் பிணை முறி கடனை செலுத்த வேண்டிய நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் போது அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

டொலரை இலங்கையில் அச்சிட முடியாது என்பதை அனைவரும் அறிவர். 

இதனால் இலங்கை பொருளாதார சூறாவளியில் சிக்குண்டுள்ள ஒரு நாடாகவும் கருதப்பட்டது. எனினும் தற்போது நாம் அதனை செலுத்தியுள்ளோம். 

அத்தோடு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. 

இலங்கையானது இந்தியாவுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நட்புறவுடன் செயற்படும் நாடு என்ற அடிப்படையில் , துன்பமான நிலைமைகளின் போது இந்தியா கைகொடுக்கும் என்று அந்நாட்டு நிதி அமைச்சரினால் வாக்குறுதியளிக்கப்பட்டது. 

நாம் பொருளாதார சூறாவளிக்கு மத்தியிலும் கடனை மீள செலுத்த முடிந்தமை மகிழ்ச்சிக்குரியது என்றார்.