(எம்.மனோசித்ரா)

தரம் குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக பெற்றோலிய கூட்டத்தாபனம் சார்ந்த எந்தவொரு தொழிற்சங்கமும் இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டினையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போதே இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நபரே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தரத்தினை மாற்றுவது தொடர்பான நிலைப்பாடு கூட எவர் மத்தியிலும் தோன்றவில்லை. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகள் மாத்திரமேயாகும். 

சில சந்தர்ப்பங்களில் டிசல் மூலம் உயர் இலாபத்தைப் பெறுவதற்காக டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றில் வேறு பதார்த்தங்களை கலப்படம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. 

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதனால் பாதிக்கப்பட்ட அல்லது அது தொடர்பில் அறிந்த நபர்களால் முறைப்பாடளிக்கப்பட்டால் மாத்திரமே எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறன்றி சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் ஊடாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.