Published by T. Saranya on 2022-01-19 15:48:22
(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்தை முழுமையாக புறக்கணிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கடந்த காலங்களில் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொண்டதைப் போன்று தேவைக்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியத்தை நாடலாம் என்று அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் தீர்மானங்கள் எடுத்துள்ளதா என்று இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவையிலோ அல்லது நிதி அமைச்சிலோ சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் 1950 இல் நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடாக இணைந்து கொண்டதையடுத்து, 16 சந்தர்ப்பங்களில் உதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளோம். இறுதியாக 2016 இல் 1.1 பில்லியன் டொலரைப் பெற்றுள்ளோம்.
யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதியில் 2008 ஆம் ஆண்டு தீர்க்கமான காலப்பகுதியில் 2.5 பில்லியன் டொலரை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய டொலர் உதவி இதுவாகும். எனவே சர்வதேச நாணய நிதியம் எமக்கு தேவையற்ற ஒரு நிறுவனம் என்று கூறுவது சிறந்ததல்ல.
இலங்கை அதன் அங்கத்துவ நாடாகும். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் நம்பிக்கையை சிதைவடையச் செய்யவில்லை.
எவ்வாறிருப்பினும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. வரலாற்றுடன் ஒப்பு நோக்கி, தீர்மானங்களை எடுப்போம் என்றார்.