(என்.வீ.ஏ)
இலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 22 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின், சிக்கந்தர் ராஸா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், சோன் வில்லியம்ஸ், ரெஜிஸ் சக்கப்வா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன சிம்பாப்வேயின் வெற்றிக்கு வித்திட்டன.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க முதலாவது சதத்தைக் குவித்த போதிலும் அது பலனற்றுப் போனது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிம்பாப்வே 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.
க்ரெய்க் ஏர்வின் 91 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராஸா 56 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் 48 ஓட்டங்களையும் ரெஜிஸ் சக்கப்வா 47 ஓட்டங்களையும் பெற்று ஸிம்பாப்வே அணி பலமான நிலையை அடைய உதவினர்.

வில்லியம்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏர்வின், 5ஆவது விக்கெட்டில் சிக்கந்தர் ராஸாவுடன் மேலும் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

முன்னதாக முதலாவது விக்கெட்டில் டக்குட்ஸ்வனாஷே கய்ட்டானோவும் சக்கப்வாவும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக் கொடுத்திருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டர்சே 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
கடினமான 303 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க (16), குசல் மெண்டிஸ் (7), தினேஷ் சந்திமால் (2), சரித் அசலன்க (23) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
4 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்கள் என்ற நிலையில் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு தெம்பூட்டினர்.
கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து 6ஆவது விக்கெட்டில் சாமிக்க கருணாரட்னவுடன் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசுன் ஷானக்க 7 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 102 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார்.
சாமிக்க கருணாரட்ன 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் இலங்கையின் வெற்றிக்கான அற்பசொற்ப நம்பிக்கை அற்றுப்போனது.
ஸிம்பாப்வே பந்துவீச்சில் டெண்டல் சத்தாரா 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸாராபனி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: க்ரெய்க் ஏர்வின்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானமிக்க கடைசி போட்டி இதே மைதானத்தில் வெள்ளியன்று நடைபெறும்.