தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அவ்வப்போது, முதலமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது. 

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, முதலமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். 

முதலமைச்சர் வைத்தியசாலையில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், முதலமைச்சரின் உடல் நிலைபற்றி வருகிற 6 ஆம் திகதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.