(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் இருக்கின்றது என பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

 பால்மா இறக்குமதி செய்வதற்கு தேவையான வங்கி நாணய கடிதம் திறப்பதற்கு டொலர் பற்றாக்குறையாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டொன் பால்மா தேவையாகின்றது. அதற்காக 30 மில்லியன் டொலர் தேவையாகின்றது. சாதாரணமாக வாரத்துக்கு ஒருமுறை பால்மா அடங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகின்றது. 

தற்போதைய நிலைமையில் பால்மா அடங்கிய கப்பல் ஒன்று வர இருப்பது இந்த மாதம் இறுதி இரண்டு வாரங்களுக்குள்ளாகும். அவ்வாறு பால்மா அடங்கி கப்பல் வந்தாலும் தற்போது பால்மாவுக்கு இருக்கும் பற்றாக்குறை தீரப்போவதில்லை எனவும் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.