ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 03

Published By: Digital Desk 2

17 Jan, 2022 | 11:29 PM
image

ஸ்ரீ ஸக்தி சுமனன்

ஸ்ரீ அரவிந்தர் ‘திருமணக்காதல் மரணத்தை வென்றது’ என்ற ஒரு சிறிய எளிய புராணக்கதையை அரிய காவியமாக, மரணத்தை வெல்லும் யோக இரகசியத்தை மனித குலத்திற்குச் சொல்லும் கதையாக, ‘தெய்வீக சக்தி எப்படி யோக சாதனை மூலம் கீழிறங்கி மனிதனை தெய்வ உருவமாற்றம் செய்து மரணதேவனுடன் போரிட்டு வெல்லுகிறது’ என்ற விவரணத்தை அழகிய கவித்துவம் நிறைந்த காவியமாக ஆக்கித் தந்துள்ளார். 

இந்தக் கதையைக் காவியமாக்கி அதற்குள் தனது யோகசாதனை அனுபவங்களையும் புதைத்து தெய்வீக அன்னையின் உதவியுடன் எப்படி சாதாரணமான தாழ் மனம் ஆனது, பரிணாம வளர்ச்சி பெற்று உணர்வு விரிதலின் மூலம் மிக உயர்ந்த அதிமனநிலையை அடைகிறது, விஞ்ஞானமய கோச வளர்ச்சி, வாழ்க்கை எப்படி தெய்வ உருமாற்றத்தைப் பெறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஸ்ரீ அரவிந்தர் பேசியுள்ளார். 

எப்படி மரணமும் வாழ்க்கையும் தொடர்புபடுகிறது; இருளிலிருந்து ஒளிக்கு ஆன்மா என்ற உணர்வு எப்படிச் செல்கிறது, பௌதீக சடத்திலிருந்து எப்படி உயிர் தோன்றுகிறது போன்ற அனைத்தும் இங்கு சொல்லப்படுகின்றன. 

இந்தக்காவியத்தை ஸ்ரீ அரவிந்தர் Savitri – A Legend and Symbol என்று பெயரிட்டுள்ளார். இதை நாம் தமிழில் அர்த்தத்துடன் புரிந்துகொள்வதாக இருந்தால் ’ஸாவித்ரி - சங்கேத குறியீட்டு மொழியில் ஒரு புராணக்கதை’ என்று மொழிபெயர்க்கலாம். ஒரு புராணத்திற்குள் மனித குலத்தின் வரலாறு, பிரபஞ்சத் தோற்றவியல், கவித்துவம், அறிவியல், மெய்யியல், கடவுள்கள், தேவதைகள், பிரபஞ்ச மறையியல் ஆற்றல்கள், தேவதைகள் போன்ற பல்வேறு கதம்பங்கள் கலந்து வரும். 

இவை அனைத்தும் ஒரு அநேர்கோட்டு  முறையில் (nonlinear aspect) தொகுக்கப்பட்டு குறியீட்டு சங்கேத மொழியில் தரப்பட்டிருக்கும். புராணங்கள் பொதுவாக மனிதனது சொந்த அகப்போராட்டங்களினதும், உணர்வின் உயர் நிலை பரிணாமம் பற்றியதுமான உருவகக் கதைகள். இவற்றை அப்படியே நடந்த சரித்திரங்களாக மாத்திரம் பார்க்க முடியாது. 

பெரும்பாலும் ஸ்ரீ அரவிந்தர் எப்படி மகாபாரதத்தில் திரௌபதிக்கு பதிபக்திக்காக கூறப்பட்ட சிவமகாபுராணத்தில் இருக்கும் ஒரு சிறிய கதையை தனது யோக சாதனையின் அனுபவத்தை அனைவருக்கும் பகிருந்து கொள்ள காவியமாக்கினாரோ அதேபோன்று புராணங்கள் சில உண்மைச் சம்பவங்களை வைத்துக்கொண்டு அகமுன்னேற்றம் தரும் யோக இரகசியங்களைக் கூறும் காவியங்களாக இருக்கும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதனாலேயே ஸ்ரீ அரவிந்தர் ஸாவித்ரியை ஒரு புராணம் என்று கூறி அதற்கு மேல் அது சங்கேத குறியீட்டு மொழியில் அமைந்த புராணம் என்று கூறுகிறார்.

 இந்தப்புராணத்தை ஆங்கிலத்தின் காவியச் செறிவிற்காக மொழியை, இலக்கியம் படிப்பவர்கள் எடுத்துக்கொண்டலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள மொழியைத் தாண்டி அதன் குறியீடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்த ஸ்ரீ அரவிந்தர் காவியத்தின் தலைப்பில் A Legend and Symbol என்று பெயரிட்டுள்ளார். இதை மேலும் உணர்ந்துகொள்ள ஸ்ரீ அரவிந்தரை ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியம்.

ஸ்ரீ அரவிந்தர் மிகச்சிறியவயதில் பிரித்தானிய கலாச்சாரத்தை விரும்பும் பிரித்தானிய ஆட்சியில் மருத்துவராக உயர்பதவியிலிருந்த அவரது தந்தையால் லண்டனுக்கு அனுப்பப்பட்டு பாரதீய வாசனையே அற்ற மேற்கத்தேய கல்வியாளனாக ஆங்கிலேய ஆட்சியில் ஒரு நிர்வாகியாக – கலெக்டராக வந்து அமரவேண்டும் என்று வளர்க்கப்பட்ட ஒருவர். ஆனால், அகத்தில் அதற்கு நேர் எதிர்மாறாகன ஒரு ஆளுமையாக, பாரதீய சனாதன தர்மத்தின் வித்தாக மாறுகிறார்.

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05