(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் லீக் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறுவதற்கான தீர்மானமிக்க டி குழு போட்டியில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இன்று மோதவுள்ளன.

ஸ்கொட்லாந்தை 40 ஓட்டங்களால் தனது ஆரம்பப் போட்டியில் வெற்றிகொண்ட இலங்கை, டி குழுவுக்கான அணிகள் நிலையில் 2 புள்ளிகளைப் பெற்று 0.800 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் முதலிடத்தில் இருக்கின்றது.

மேற்கிந்தியத் தீவுகளை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட அவஸ்திரேலியா 2 புள்ளிகளைப் பெற்று 0.412 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 2 ஆம் இடத்தில் இருக்கின்றது.

எனவே பசெட்டெரே விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுப்பர் லீக் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளன.

இன்றைய போட்டியில் இலங்கைக்கு முதலில் துடுப்பெடுத்தாட கிடைத்தால் முன்வரிசை வீரர்கள் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைக் குவித்து மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்க்க வேண்டும்.

ஒருவேளை, முதலாவதாக பந்துவீச நேரிட்டால் அவுஸ்திரேலியாவை குறைந்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்த இலங்கை பந்துவீச்சாளர்களும் களத்தடுப்பாளர்களும் முயற்சிக்கவேண்டும்.

இலங்கை அணியில் 9ஆம் இலக்கம் வரை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய சகலதுறை வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகின்றது.

ஆரம்ப வீரரும் ஆரம்ப பந்துவீச்சாளருமான சமிந்து விக்ரமசிங்க, துடுப்பாட்ட சகல துறை ஆரம்ப வீரரான ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுக்கக்கூடியவர்கள்.

சதிஷ ராஜபக்ஷ, பவன் பத்திராஜா, ரனுத சோமரட்ன, முதல் போட்டியில் அரைச்சதம் குவித்த சக்குண நிதர்ஷன லியனகே, அணித் தலைவர் துனித் வெல்லாலகே, ரவீன் டி சில்வா, வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் யசிரு ரொட்றிகோ ஆகிய அனைவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக்கூடியவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த கால சர்வதேச இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் கணிசமான ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திவந்துள்ளனர்.

இன்றைய போட்டியில் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் வனுஜ சஹான், வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண ஆகிய இருவரில் ஒருவருக்குப் பதிலாக வலதுகை சுழல்பந்துவீச்சாளர் ட்ரவீன் மெத்யூ இறுதி அணியில் இடம்பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அவுஸ்திரேலியாவின் டேகு வில்லி, தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சகலதுறை வீரர் நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கட்டுப்படுத்த இலங்கை பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கவேண்டிவரும்.

பெரும்பாலும் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் இன்றைய போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு அமைய கோரி மில்லர், டேகு வில்லி, ஐசாக் ஹிகின்ஸ், கூப்பர் கொனொலி (அணித் தலைவர்), நிவேதன் ராதாகிருஷ்ணன், கெம்பல் கெலாவே, ஏய்டன கெஹில், டோபியாஸ் ஸ்னெல், வில்லியம் சால்ஸ்மன், டொம் விட்னி, ஹர்க்கிரத் பஜ்வா ஆகியோர் அவுஸ்திரேலிய இறுதி பதினொருவரில் இடம்பெறுவர் என நம்பப்படுகின்றது.

டி குழுவுக்கான மற்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை ஸ்கொட்லாந்து இன்று எதிர்த்தாடவுள்ளது.