தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வு காணும் முக­மாக தொழில் அமைச்சில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இதேவேளை  தொழில் அமைச்சில் நேற்று முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் 11 ஆவது தட­வை­யாகநடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை எவ்­வித இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­ப­டாத நிலையில் தோல்­வியில் முடி­வ­டைந்­தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தலை­மையில் நாரா­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள தொழில் மற்றும் தொழிற்­சங்க உறவு துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 

நாளொன்­றுக்கு 620 ரூபா­வாக வழங்­கப்­படும் சம்­ப­ளத்தை 745 ஆக அதி­க­ரிக்க வேண்டும். இவ்­வாறு சம்­பளம் அதி­க­ரித்த பின்னர் தொழி­லா­ளர்­க­ளுக்கு 6 நாட்கள் வேலை வழங்­கப்­பட வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் வாதிட்­டன.

எனினும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை 730 ரூபா­வாக அதி­க­ரிக்க முடியும். ஆனாலும் தொழி­லா­ளர்கள் 4 நாட்கள் மாத்­தி­ரமே வேலை செய்ய வேண்டும் என முத­லா­ளிமார் சம்­மே­ளனம் வாதிட்­டது. இதன்­படி தொழிற்­சங்­கங்­களின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தனை அடுத்து இணப்­பா­டுகள் எதுவும் எட்­டப்­ப­டாத நிலையில் பேச்­சு­வார்த்தை முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

 இதில் பெருந்­தோட்ட கைத்­தொழில் துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, தொழில் மற்றும் தொழிற்­சங்க உறவு துறை இரா­ஜாங்க அமைச்சர் ரவீந்­திர சம­ர­வீர, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் , அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்­டமான், மத்­திய மாகாண சபை அமைச்சர் என்.ரமேஸ்­வரன், இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்­கத்தின் செய­லா­ளரும் ஊவா மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்­தோட்ட தொழி­லாளர் கூட்­ட­மைப்பின் தலைவர் எஸ். ராம­நாதன் உட்­பட தெழிற்­சங்க பிர­தி­நி­திகள் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

தோட்ட தொழி­லா­ளர்கள் தமது சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க கோரி தொடர்ந்து 10 ஆவது நாளாக இன்றைய தினமும் பேராட்­டங்­களில் ஈடுட்­டு வருகின்றனர்.