கடல் நீருக்கடியில் எரிமலை வெடித்ததையடுத்து, சுனாமி அலைகளினால் பாதிக்கப்பட்ட டொங்காவில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன.
இந்த வெடிப்பு டொங்காவின் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்கச் செய்தது, இதனால் தீவுகளில் வசிக்கும் 105,000 மக்களுடனான தொடர்பும் சனிக்கிழமை மாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால் அவுஸ்திரேலிய பொலிஸார் கணிசமான சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
சனிக்கிழமை ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பானது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் எங்கும் பதிவு செய்யப்படாத மிகப்பெரியதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெடிப்பினையடுத்து சாம்பல் புகை மண்டலம் 20 கிலோமீற்றர்கள் (12.4 மைல்) உயரம் வரை எழுந்தது.
இதனால் விண்வெளியில் இருந்து வியத்தகு காணொளிகள் மற்றும் புகைப்படங்களை செய்மதி பதிவுசெய்தது மற்றும் வெடிப்பினால் சுனாமி அலைகள் பசுபிக் தீவு முழுவதும் தாக்கின.