(இராஜதுரை ஹஷான்)

மின்சாரத்துறை அமைச்சு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவது பயனற்றது. 

மின்சார சபை டொலரை திரட்டிக் கொடுத்தால் எரிபொருளை விநியோகிக்க தயாராகவுள்ளோம் என வலுசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சு பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்துடன் எரிபொருள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள விடயம் குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் கொள்வனவிற்கான டொலரை திரட்டிக் கொள்வதற்கு வலுசக்தி துறை அமைச்சு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

அவ்வாறான நிலையில் மின்சாரத்துறை அமைச்சிற்கும் எரிபொருளை விநியோகிப்பதற்கு டொலரை திரட்டுவது நெருக்கடி நிலைமையினை தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபை,ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் ஆகியவவை டொலர் திரட்டிக் கொடுத்தால் அந்நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்போம் என கடந்த செப்டெம்பர் மாதமளவில் குறிப்பிட்டோம்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை தமக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்க டொலர் ஊடாகவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கிறது.

இலங்கை மின்சார சபை டொலரில் கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்காமல் ரூபாவில் கொடுக்கல் வாங்களை முன்னெடுக்க முயற்சிக்கிறது.

இலங்கை மின்சார சபை டொலர் திரட்டிக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு மின்சார சபை பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவது பயனற்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்வரும் நாட்களில் சந்தை விலைக்கு அமையவே மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்கு மாத்திரம் 4 ஆயிரம் பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. இந்த பெருந்தொகையான டொலரை திரட்டிக் கொள்ளும் பொறுப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உண்டு என்றார்.