(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை தற்போது ஒப்பீட்டளவில் சீர்செய்துள்ளோம். அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் என அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அடிப்படையற்றவை என மத்திய வங்கியின் ஆளுநர்  அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது.நிலைமையினை சீர்செய்வதற்கு மத்திய வங்கி பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியது.

தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினை தற்போது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் என அரசியல் தரப்பில் முன்வைக்கப்படும் விடயங்கள் அடிப்படையற்றவை.

மருந்து,எரிபொருள்,மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்.

அரசியல் கோணத்தில் இருந்து பொருளாதார காரணிகளை அனுக முடியாது. பெரும்பாலான அரசியல்வாதிகள் அரசியல் நோக்கத்திற்காக பொருளாதாரம் குறித்து மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் சீர்செய்ய முடியும். அதற்கான திட்டங்களை தற்போது செயற்படுத்தி வருகிறோம். பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைத்துறைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமானதாகும் என்றார்.