(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் அமைச்சு பதவிகளை நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம். திறமையானவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தை பொது இடங்களில் விமர்சிக்கும் அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தின் போதோ,குழு கூட்டத்தின் போதோ தங்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் கருத்துரைப்பதில்லை.

தேர்தல் காலத்தில் விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் அமைச்சு பதவிகளை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மீண்டும் வலியுறுத்தவுள்ளோம்.

ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் விமர்சிக்கும் போது அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடே தோற்றம் பெறும்.

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பவர்களை பதவி நீக்கி திறமையானவர்களுக்கு அப்பதவிகளை வழங்குவது அவசியமாகும்.

பொதுஜன பெரமுனவின் திறமையான உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய செயற்படுகிறார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கிறார்கள்.

ஆட்சியதிகாரத்தை எவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொவிட் தாக்கத்தி;ல் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினால் மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஒரு சில விடயங்களில் குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.அனைத்திற்கும் ஜனாதிபதி பொறுப்பு கூற முடியாது.

தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்.எதிர்வரும் 3 ஆண்டு காலம் தீர்மானமிக்கதாக அமையும் என்பதை ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.மக்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.