(எம்.ஆர்.எம்.வசீம்)

பொரளை கத்தோலிக்க தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமைக்கு பின்னால் மீண்டும் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விரக்தியை மறைப்பதற்கான சதித்திட்டமா என்ற சந்தேகம் எழுகின்றது. 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜெஸ்மினை கைதுசெய்வதற்கு இதுவரை எந்த நடவடிக்கையையும் குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொரளையில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்தவாரம் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை திருப்தியடையாததால், அதுதொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சரும் பாதுகாப்பு செயலாளரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

குறிப்பாக குறித்த தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த, அந்த பகுதியில் இருக்கும் சீ.சி.டிவி கமராக்களை அன்றைய தினம் முழுமையாக பரிசோதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை கர்தினால் முன்வைத்தபோதும் பொலிஸார், அன்றைய தினம் மாலை நேரத்தில் இருந்து பரிசோதித்தால் போதும் என தெரிவித்ததில் சந்தேகம் எழுகின்றது.

 ஏனெனில் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள் காரணமாக நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது.  

பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துச்செல்கிறது. இதன் கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றது. 

அதனால் இந்த அரசாங்கம் தற்போது மக்களின் செல்வாக்கை இழந்துவருகின்றது. இதனை மறைப்பதற்கு மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டமாகவும் இந்த சம்பவம்  இருக்கலாம்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஆயிரம் நாட்கள் கடந்துள்ள நிலையில்,சஹ்ரான் கும்பலின் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா ஜஸ்மினைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சாரா இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்ற விடயம் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அப்படி இருந்தும் சாராவை கைதுசெய்வதற்கு இதுவரை குற்றப்புலனாய்வு பிரிவு பிடியாணை கட்டளை ஒன்றை நீதிமன்றில் பெறவில்லை. 

அவரை கைதுசெய்வதற்கு இந்தியாவிடமும் கோரிக்கை விடுக்கவில்லை. சாராவை கைதுசெய்தால், இந்த தாக்குதலின் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை என்றார்.