(எம்.ஆர்.எம்.வசீம்)

நான் அமைச்சராக இருக்கும் வரை நீர் வழங்கல் சபையை தனியார் மயப்படுத்த விடமாட்டேன் .எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது என்பதே எனது நம்பிக்கையாகும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சின் தொழில்நுட்ப பயிலுனர்கள் 41 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

இன்னும் சில நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் நீர் வழங்கல் நாட்டின் முக்கிய கேந்திரமாகும். 

நீர் வழங்கல் மூலம் இலாபம் பெற்றுக்கொள்வது நோக்கமல்ல. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதே எமது நோக்கம். 

அதனால் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை தனியார் மயமாக்கப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.

அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது. நான் இந்த அமைச்சில் இருக்கும்வரை அதனை செய்ய இடமளிக்கப்போவதும் இல்லை.

தொழில்நுட்ப பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்கள் உங்களது திறமையை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். 

எமது வாழ்க்கை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற இரண்டும் ஒன்றுதான். எமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவது எமது நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதாகும். 

அது எமது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதாகும். இதனை மனதில் வைத்து எமது கடமைகளை முன்னெடுக்கவேண்டும். 

ஜேர்மன் தொழில்நுட்ப திறமையை உலகமே அங்கீகரிக்கும்.தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உலகிற்கு எதிர்காலம் இல்லை.

மனித இனத்திற்கும் எதிர்காலமில்லை. தொழில்நுட்ப ஞானத்தின் வருகையின் ஊடாக நாம் பரிணாமம் அடைந்து வளர்ச்சி பாதைக்கு வந்துள்ளோம். 

இளைஞர்கள் என்ற வகையில் தொழில் ரீதியாக சமமான நிலைப்பாடு இருக்க வேண்டும். அது அரசியலுக்கு பொருந்தாது. அது அவர்களின் சுதந்திரமாகும். 

எனினும் அது தனது தொழிலுக்கு அப்பாற்பட்ட பணியாகும். தமது தொழில் கடமைகளையும் அரசியலையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. 

தொழில் ரீதியான கடமைகளை நிறைவேற்றிய பின்னர் தமக்கு விருப்பமான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.