(எம்ஆர்.எம்.வசீம்)

இடதுசாரிகள் உட்பட அரச விரோத கட்சிகளை இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணியை அமைப்போம் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கூட்டணியில் இருக்கும் தகுதியான ஒருவரை பொதுவேட்பாளராக களமிறக்கவும் எதிர்பார்க்கின்றோம் என்றும் கூறினார்.

புதிய இலங்கை சுதந்திர கட்சி தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதன் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்போகும் வேலைத்திட்டம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்துக்கு இன்னும் காலம் இருக்கின்றது. அதன் காரணமாக அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்கு செல்லப்போவதில்லை. அதனால் நாங்கள் திட்டமிட்டு செயற்படுவதற்கு எங்களுக்கு போதுமான காலம் இருக்கின்றது. 

எமது கட்சியின் காரியாலயம் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி பத்தரமுல்லையில் திறந்துவைக்கப்பட இருக்கின்றது. இதன்போது பரந்துபட்ட கூட்டணியை அமைத்துக்கொள்ளவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.