பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் சனிக்கிழமையன்று எரிமலை வெடித்தது.

இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் கடலோர வீடுகளை சுனாமி அலைகள் தாக்கியதை காட்டியுள்ளது.

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டது மற்றும் தெற்கில் உள்ள அமாமி தீவுகளில் மூன்று மீட்டர் (9.84 அடி) உயர அலைகள் தாக்கக்கூடும் என்று கூறியுளது. முன்னதாக அங்கு ஒரு மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கின.

எனினும் இதனால் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒலிபரப்பான NHK தெரிவித்தது.

சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் டொங்காவின் தலைநகரமும் கடுமையான சுனாமி அலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்தது. கடலோர சாலைகளில் அலைகள் பாய்ந்து, சொத்துக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

நியூசிலாந்து மற்றும் ஜப்பானின் சில பகுதிகளிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும் சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதால், இந்த வெடிப்பு பசுபிக் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.